Published:Updated:

`நான் என்ன தவறு செய்தேன் யுவர் ஆனர்!' - நீதிபதியிடம் கதறிய சட்டக்கல்லூரி மாணவன்

`நான் என்ன தவறு செய்தேன் யுவர் ஆனர்!' - நீதிபதியிடம் கதறிய சட்டக்கல்லூரி மாணவன்
`நான் என்ன தவறு செய்தேன் யுவர் ஆனர்!' - நீதிபதியிடம் கதறிய சட்டக்கல்லூரி மாணவன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், ''மாணவன் என்ன தவறு செய்தான் என்று சொல்லுங்கள்'' என்று நீதிபதி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணாபுரத்தைச்  சேர்ந்தவர் பிரித்திவிராஜன் . இவர், செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை படித்தார். சட்டப் படிப்பை முடித்த பிரித்திவிராஜன், மூன்று பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை. இதனால் அந்தத் தேர்வை 2017 நவம்பர் மாதத்தில் எழுதினார். ஆனால், அவர் எழுதிய தேர்வுக்கான முடிவு வெளியிடப்படவில்லை. இதுகுறித்து அவர் சட்டக்கல்லூரி, சட்டப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விசாரித்தபோது சரியான பதில் அளிக்கப்படவில்லை. 

இந்தச் சூழ்நிலையில், கடந்த 17.3.2018ல் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் ஆஜராகும்படி பிரித்திவிராஜனுக்கு சட்டப் பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது. அதன்பேரில் அங்கு சென்ற பிரித்திவிராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு, 22.3.2018ல் சட்டப்பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்திவிராஜனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 2020-ம் ஆண்டு வரை நீங்கள் தேர்வு எழுத தடைவிதிக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டிருந்தது. 

 இதையடுத்து அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜெனிதா அலெக்ஸ்  ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, அதிரடியாக தீர்ப்பை வழங்கினார். அதில், `சட்டக்கல்லூரி மாணவர் பிரித்திவிராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், என்ன காரணத்துக்காக அவர்மீது அந்த

நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதற்கான விளக்கத்தை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட சீல் வைக்கப்பட்ட தகவலில்கூட அதற்கான விளக்கம் இல்லை. எனவே, தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதோடு, இரண்டு வாரங்களில் தேர்வின் முடிவை வெளியிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வழக்கறிஞர் ஜெனிதா அலெக்ஸ்  கூறுகையில், ``சட்டக்கல்லூரி மாணவர் பிரித்திவிராஜன்  எழுதிய தேர்வின் முடிவை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்னும் அது வெளியிடப்படவில்லை. மேலும், மாணவர் பிரித்திவிராஜன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சம்பந்தப்பட்ட கல்லூரியும் சட்டப் பல்கலைக்கழகமும் தவறிவிட்டது. இதனால்தான் பிரித்திவிராஜனுக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லையென்றால், மீண்டும் நீதிமன்றத்தில் முறையீடுவோம்" என்றார். 

சட்டக்கல்லூரி மாணவர் பிரித்திவிராஜன் கூறுகையில், ``என்னுடைய அப்பா பால்சாமி இறந்துவிட்டார். மாமா அன்புசெழியன்தான் என்னை சட்டம் படிக்கவைத்தார். சட்டபடிப்பை முடித்து, நான் எழுதிய மூன்று அரியர்ஸ் பேப்பர்களுக்கான தேர்வு வெளியிடப்படவில்லை. அதுகுறித்து கல்லூரி முதல்வர், துறை தலைவர், கல்லூரி அலுவலகம் ஆகியவற்றில் விசாரித்தேன். ஆனால், அவர்கள் எனக்கு சரியாகப் பதிலளிக்கவில்லை. இதனால் சட்டப்பல்கலைக்கழகத்துக்குச் சென்றேன். அதன்பிறகு தேர்வு முடிவை வெளியிடக் கோரி கடிதம் எழுதினேன். பின்னர் சட்டப் பல்கலைக்கழகத்திலிருந்து 2020-ம் ஆண்டு வரை நான் தேர்வு எழுதத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. நான் என்ன தவறு செய்தேன் என்று நான் பயின்ற கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் கேட்டேன். அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த ஓராண்டாக, தேர்வு முடிவுக்காக சட்டப்போராட்டத்தை நடத்தியுள்ளேன். எனக்குக் கிடைத்த தீர்ப்பின்மூலம், விரைவில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.