Published:Updated:

70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி!

70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி!
70 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறை - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்த இந்திய நீதிபதி!

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆசிஃப் சயீத்கான் கோஷா பதவியேற்பு விழாவில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் கலந்துகொண்டார். 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 26 வது தலைமை நீதிபதியாக கோஷா, நேற்று பதவியேற்றுக் கொண்டார். இஸ்லாமாபாத்தின் அய்வான் இ சர்தார் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லேகுர், வடக்கு சைப்ரஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நரின் ஃபெர்டி செஃபீக், நைஜீரியாவைச் சேர்ந்த நீதிபதி காஷிம் ஜன்னா, கனடாவைச் சேர்ந்த நீதிபதி சாண்ட்ரா இ ஆக்ஸ்னர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட நீதிபதிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் அவர்கள் அமரவைக்கப்பட்டனர். பின்னர், புதிதாகப் பதவியேற்ற தலைமை நீதிபதி கோஷா மற்றும் நீதிபதி மன்சூர் அலி ஆகியோருடன் இணைந்து அவர்கள் 3 வழக்குகளை விசாரித்தனர். குற்றவாளி ஒருவர் மேல்முறையீட்டு வழக்கு, ஜாமீன் கோரிய மனு மற்றும் இடப் பிரச்னை குறித்த சிவில் வழக்கு ஆகிய 3 வழக்குகளை அந்த நீதிபதிகள் சுமார் 45 நிமிடம் விசாரித்தனர். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 70 ஆண்டுக்கால வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், அமர்வில் இருந்து வழக்குகளை விசாரிப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள். 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கோஷாவின் நெருங்கிய நண்பரான மதன் பி.லோகுர், அவரைப் பல சந்தர்ப்பங்களில் பாராட்டியுள்ளார். 2004-ம் ஆண்டில் நீதிபதி கோஷா லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவர் மனிதநேயமிக்க மனிதர் என்று அப்போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மதன் பி.லோகுர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த நீதிபதி மதன் பி.லோகுர், பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த நீதிபதிகளை வழக்குகளை விசாரிக்க அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். `இந்திய நீதிமன்றங்களைப்போல் கூட்டம் நிரம்பி வழியவில்லை. அதேநேரம், பத்திரிகையாளர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்’ என்றும் நீதிபதி மதன் பி.லோகுர் குறிப்பிட்டார். பதவியேற்பு விழாவுக்காகத் தன் மனைவி சவிதா லோகுருடன் அட்டாரி - வாகா எல்லை வழியாகப் பாகிஸ்தான் சென்ற நீதிபதி மதன் பி.லோகுர், அதேவழியாக இன்று நாடு திரும்புகிறார்.