பிரீமியம் ஸ்டோரி

ன் கணவன் மீது தகாத திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான் என்பதற்காக போர்க்கோலம் பூண்டு நீதி கேட்டாள் கண்ணகி. நீதி வழங்குவதில் முறை தவறிவிட்டோம் என்பதை உணர்ந்ததும் பழிக்கு அஞ்சி உயிர் துறந்தான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று சிலப்பதிகாரத்தின் மூலம் வலியுறுத்தினார் இளங்கோவடிகள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தமிழ் மண்ணில்தான் ஊழல் குற்றச்சாட்டுகள், ரெய்டுகள், சி.பி.ஐ விசாரணை தொடங்கி இப்போது கொலைக்குற்றச்சாட்டு வரை எழுந்தபோதும் எந்தச் சலனமும் இல்லாமல் நகர்கிறது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி.

அறம் கூற்றாகும்



ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகே பலவித சர்ச்சைகள் எழுந்தாலும், சசிகலா கட்டுப்பாட்டில் இருந்தவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி அரசு, ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்குப் பிறகு அதுகுறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. அரசு அமைத்த ஆணையத்தையே மதிக்காமல், ‘ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை’, ‘ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டது’ என்றெல்லாம் தமிழக அமைச்சர்களே மனம் போனபோக்கில் பேசத் தொடங்கினார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்த மர்ம முடிச்சுகளே அவிழாமல் இருக்கும் சூழலில் கொடநாடு எஸ்டேட் கொள்ளைச் சம்பவமும் கொலைகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.  கொடநாடு கொள்ளைச் சம்பவத்தின்போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். சிலநாள்களில், முதல் குற்றவாளியும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருமான கனகராஜ் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கே.வி. சயன் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அவரது மனைவியும், மகளும் பலியானார்கள். கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். கொள்ளை நடந்த ஐந்தே மாதத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். 

இப்போது ‘கொடநாடு கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான்’ என்று தெரிவித்திருக்கிறார்கள் குற்றம் சாட்டப்பட்ட சயனும் மனோஜும். இதுகுறித்த ஆவணப்படத்தை வெளியிட்டிருப்பவர் பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல். ‘தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை’ என்று நிரூபிப்பதில் முனைப்பு காட்டுவதைவிட, சயனையும் மனோஜையும் கைது செய்வதிலேயே தீவிரம் காட்டினார் எடப்பாடி. ‘வலுவான காரணங்கள் இல்லாததால் இருவரையும் சிறையில் அடைக்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

‘தன்மீது சுமத்தப்படுவது பொய்க்குற்றச்சாட்டு’ என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கூறினாலும், கொடநாடு கொள்ளைவழக்கில் எப்படி அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை விளக்கும் பொறுப்பு அவர் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் காவல்துறைக்கு உண்டு. ‘குற்றவாளி இல்லை’ என்று நிரூபிக்கப்படும்வரை, தமிழக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகுவதுதான் அரசியல் தார்மீகம்.

அரசுகள் மாறலாம்; ஆளுங்கட்சி மாறலாம். ஆனால் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற வாழ்வியல் உண்மை என்றும் மாறாது என்பதை எடப்பாடி உணர வேண்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு