Published:Updated:

“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”

“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”
பிரீமியம் ஸ்டோரி
News
“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”

கண்கலங்கிய அற்புதம் அம்மாள்...

ற்புதம் அம்மாள்... 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மகனை மீட்கும் போராட்டத் தீயில் தவிப்போடு நிற்கும் தாய். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு தமிழர்கள் விடுதலையில், ‘தமிழக அரசு முடிவு எடுக்கலாம் ’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பெழுதி நூறு நாள்கள் கடந்து விட்டன. தீர்ப்பை அமல்படுத்தும்படி கவர்னருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துவிட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், மக்களிடம் நியாயம் கேட்டு நடைப்பயணம் தொடங்கி யுள்ளார் அற்புதம் அம்மாள்.

கோவையில் கடந்த ஜனவரி 24-ம் தேதி, அற்புதம் அம்மாளின் முதல் மக்கள் சந்திப்புத் தொடங்கியது. அந்தக் கூட்டத் தில் பேசிய அற்புதம் அம்மாள், ‘‘எனக்கு 71 வயசு ஆகிருச்சு. என் மகன் அறிவுக்கு 47 வயசு. நான் சாகுறதுக்குள்ள என் மகனோடு கொஞ்ச நாளாச்சும் சேர்ந்து வாழணும்ப்பா’’ எனக் கைகூப்பிக் கேட்க... கண்ணீரோடு தொடங் கியது கூட்டம்.

“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”

கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் சிவக்குமார், “28 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தச் சட்டப் போராட்டம், தாங்க முடியாத வலியும் வேதனையும் நிரம்பியது. ‘பேரறிவாளனின் வாக்கு மூலத்தை நான் முழுமையாகப் பதிவுசெய்திருந்தால்  இந்த வழக்கே நடந்திருக்காது’ என்று வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வுப் பெற்ற பிறகு மனம் தாங்காமல் சொன்னார். பிறகு, ‘தீர்ப்பில் பிழை நேர்ந்துவிட்டது. அதை மீளாய்வு செய்ய வேண்டும்’ என நீதிபதி கே.டி.தாமஸ் ஒப்புக் கொண்டார். எந்தச் சட்டம் தண்டனை கொடுத்ததோ, அதே சட்டம்தான் விடுவிக்க லாம் என்றும் தீர்ப்பு எழுதியிருக்கிறது. எத்தனையோ கோப்பு களில் கையெழுத்திடும் கவர்னர், எழுவர் விடுதலைக் கோப்பில் கையெழுத்திடத் தயங்குவது ஏன்? பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உடனடியாக விடுவி யுங்கள். அம்மாவின் கண்ணீருக்கு விடை கொடுங்கள்” என்றார் உருக்கமாக.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராமகிருட்டிணன், “தமிழகம் முழுவதுமிருந்து 1,000 பேர்  28 நாள்கள் சிறை செல்லத்  துணிந்தால் போதும். ஏழு தமிழர்களின்  விடுதலை உடனடியாகச் சாத்தியமாகும். எல்லோருக்கும் இது நியாயம் இல்லைன்னு தெரியுது. அப்போ இந்த அநியாயத்தை மக்களாகிய நாம்தான் தட்டிக்கேட்க வேண்டும்” என்றவர், அற்புதம் அம்மாவைப் பார்த்து, “அம்மா... நீங்கள் உத்தரவிடுங்கள். ஏழு தமிழர்கள் விடுதலையாகும் வரை 1,000 பேர் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம். முதல் ஆளாக நான் வருகிறேன்” என்றார் ஆவேசமாக.

அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் பாலமுருகன், “ஒருவரைத் தூக்கிலிடுவதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், அந்த உயிரைப் பறிக்காமல் இருப்பதற்காக  ஜனாதிபதியோ அல்லது கவர்னரோ அந்தக் கோப்பின்மீது முடிவெடுக்காமல் இருப்பது என்பது உயிரைப் பாதுகாக்கும் அறம். ஆனால், 28 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டு, தனிமனிதச் சுதந்திரத்தை இழந்தவர்களின் விடுதலைக்கானக் கோப்பினை கவர்னர் கிடப்பில் போட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முடியவில்லையெனில் நிராகரியுங்கள், அல்லது திருப்பி அனுப்புங்கள். அடுத்து என்ன செய்வதென்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதற்கான அரசியல் வல்லமை எங்களிடம் இருக்கிறது. கவர்னரின் மெளனம் மிகப்பெரிய சதி. இது சட்டத்துக்கும், தனிமனித உரிமைக்கும் எதிரானது” என்று சீறினார்.

“என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்”

இறுதியாகக் கண்ணீரோடு மைக் பிடித்த அற்புதம் அம்மாள், “இத்தனை நாள்களாக என் மகன் விடுதலையை காங்கிரஸ்தான் தடுக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ‘சட்டப்படியான விடுதலையை நான் தடுக்கமாட்டேன்’னு ராகுல் காந்தி சொல்லிட்டதால இப்போ பி.ஜே.பி தயங்குதுன்னு சொல்றாங்க. எதுக்கு இந்த அரசியல்? எல்லா உண்மைகளும் தெரிஞ்சிருச்சு. உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொல்லிருச்சு. இதுக்கு மேலயும் என் மகனை உங்க அரசியலுக்குப் பயன்படுத்தாதீங்க. சிறையில சிதைஞ்சுப்போன என் மகனின் இளமைக்காலங்கள்ல் ஒரு நாளைக்கூட உங்களால இனி திருப்பித்தர முடியாது. தயவுசெஞ்சு என் மகனை என்கிட்ட கொடுத்துடுங்க. எங்கேயாச்சும் ஓர் ஓரமா நாங்க வாழ்ந்துக்குறோம்.

அய்யா கவர்னரே... நான் உங்ககிட்டக் கெஞ்சலை. சட்டத்தை மதிச்சுக் கையெழுத்துப் போடுங்கன்னுதான் சொல்றேன். என் மகன் உட்பட ஏழு பேரும் விடுதலையாகாமல் நான் என் வீட்டுக்குத் திரும்ப மாட்டேன். என் சட்டப் போராட்டம் முடிஞ்சுடுச்சு. இனி நியாயப் போராட்டம்தான். என்னை அந்த அளவுக்குப் போகவிடமாட்டாங்கன்னு நம்புறேன். கடைசி வரைக்கும் கவர்னர் செவிசாய்க்கலைன்னா இறுதியாக எல்லோரும் சென்னையில கூடுவோம். அதற்கு தமிழக மக்கள்தான் ஒத்துழைப்புத் தர வேண்டும். தருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு” என்று முடித்தார்.

அற்புதம் அம்மாள் தன் மகனுடன் வீடு திரும்ப மத்திய அரசு ஆவண செய்யட்டும்!

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்