Published:Updated:

`வெற்றுத் தாளில்தான் கையெழுத்து வாங்கினர்; நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை!’ - பேராசிரியை நிர்மலா தேவி

`வெற்றுத் தாளில்தான் கையெழுத்து வாங்கினர்; நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை!’ - பேராசிரியை நிர்மலா தேவி
`வெற்றுத் தாளில்தான் கையெழுத்து வாங்கினர்; நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை!’ - பேராசிரியை நிர்மலா தேவி

`நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. காவல்துறையினர் என்னை மிரட்டி வெறும் தாளில் கையெழுத்து மட்டுமே வாங்கினர்' எனப் பேராசிரியர் நிர்மலாதேவி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் பேரில் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி லியாகத் அலி முன் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்காக 3 பேரும் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் நிர்மலாதேவி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லப்படுவது முற்றிலும் தவறானது. காவல்துறையினர் என்னை மிரட்டி என்னிடமிருந்து வெள்ளைத்தாளில் மட்டுமே கையெழுத்து வாங்கினர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் ஆகியோரின் பெயர்களை நான் கூறவேயில்லை’’ எனத் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் ஆஜரானார்.

பின்னர் பசும்பொன்பாண்டியன் கூறும்போது, ``நிர்மலாதேவியைக் கடந்த ஒரு மாதத்துக்கு முன் சிறையில் சந்தித்தோம். இதைப் பாலியல் வழக்காக மட்டுமே பார்த்தோம். ஒரு பெண் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குக்குப் பின் பெரும் அரசியல் பின்னணி உள்ளது. அதிகாரம் படைத்தவர்கள் எல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களாக உறவினர்களையோ, நண்பர்களையோ பார்க்க நிர்மலாதேவிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது சட்டவிரோதம். அவரது உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள் அவரைப் பரிசோதிக்கவில்லை. அவருக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இந்த வழக்குக்குப் பின் பெரும் சதி நடக்கிறது.

காவல்துறையில் அவர் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்படுவது முழுவதும் தவறானது. அரசின் அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் சொல்லியதுதான் வாக்குமூலமாக எழுதப்பட்டுள்ளது. இனி அவரது பேட்டியின் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் அதிர்வலைகள் ஏற்படும். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகை முதல் காமராஜர் பல்கலைக்கழகம் வரை இந்த பட்டியல் நீள்கிறது. நீதிமன்றம் பிணை வழங்கத் தயாராக உள்ளது. அவர் வெளியே வந்தால் பல்வேறு சதி அம்பலம் வெளிவரும் என்பதால் அதிகாரவர்க்கத்தினர் அவரை சிறையிலேயே நிர்மூலமாக்குவதற்கான சதி வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாதத்தில் அவரை வெளியே கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுப்போம். உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம். உச்சத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற கீழே இருப்பவர்களும் ஈடுபடுகின்றனர். 3 பேரின் வாக்குமூலமும் தவறு. 3 பேரிடமும் காவல்துறையினர் மிரட்டி கையெழுத்து மட்டும் வாங்கியுள்ளனர்’’ என்றார்.