Published:Updated:

திருச்சி மூவர் கொலை வழக்கு! - ரவுடிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மூவர் கொலை வழக்கு! - ரவுடிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி மூவர் கொலை வழக்கு! - ரவுடிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி திருச்சி மணிகண்டம் பகுதியில் சுரேஷ், இருதயராஜ், ஆரோக்கியராஜ், ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.  இந்த கொலை வழக்கில் ரவுடிகளான குணா என்கிற குணசேகரன், சுந்தரபாண்டியன், முருகன், மனோகரன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளுக்கு இடையே நடந்த மோதலில் இந்த கொலை நடந்தது தெரியவந்தபோது பெரும் அதிர்ச்சி நிலவியது. திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில்,  நீதிபதி கார்த்திகேயன் குற்றவாளிகள் 4 பேருக்கும் பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் ரூ.17,000 அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

ஒருகாலத்தில் திருச்சியில் பிரபல ரவுடிகளாக வலம்வந்த பிச்சமுத்து, முட்டை ரவி, மணல்மேடு சங்கர் உள்ளிட்டோரை போலீஸ் என்கவுண்டர் செய்தது.  இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக வலம் வந்தவர்கள், ஆனால் முட்டை ரவிக்கு மூளையாகச் செயல்பட்ட ரவுடிகளில் மண்ணச்சநல்லூர் குணா, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட முக்கியமான ரவுடிகள் தற்போது அரசியல்வாதிகளாகவே மாறிவிட்டார்கள்.ராமஜெயம் கொலை வழக்கில்  இவர்களும் சந்தேகப்பட்டியலில் இருந்தார்கள்.

இலங்கையைச் சேர்ந்த குணாவின் குடும்பம் திருச்சி பெரியக்கடை சந்துக்கடை பகுதியில் குடியிருந்து வந்தது. அகதியாக வந்த குணா, கூடா நட்பால் ரவுடியாக வளர்ந்ததும் மண்ணச்சநல்லூர் குணா ஆனார். முட்டை ரவியின் மரணத்துக்குப் பிறகு அந்த டீமுக்கு தலைவரானார். அடுத்தடுத்த  நெருக்கடிகளால், மலைவாழ் மக்களுக்கான இயக்கம் உருவாக்கினார். தற்போது,  அ.தி.மு.க.வில் அதிகாரம் நிறைந்த தலைமையின் குடும்பத்தோடு மிக நெருக்கத்தில் இருந்தார். சாதிக் கட்சி ஒன்றில் ஐக்கியமானார். பலமுறை இவர்மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தாலும், அடுத்த சிலவாரங்களில் அதை உடைப்பது குணாவின் ஸ்டைல். அதனால் கடுப்பான போலீஸ், சிலவருடங்களுக்கு முன், ஒருவழக்கில் சிக்கிய குணாவின், இடுப்பை உடைத்து சிறைக்குள் அடைத்தது. ஆனாலும் சிறையிலிருந்தே சில ஆப்ரேசன்கள் நடத்தி வந்தார்.  இவர் மீது திருச்சி பிச்சாண்டார்கோவில் பீரங்கி மேட்டைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் சக்திவேல் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

இதேபோல் மண்ணச்சநல்லூர் குணாவுக்கு மிக நெருக்கமாக இருந்து காரியங்களைச் செய்து வந்தவர் திருச்சி சமயபுரம் அடுத்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன். தற்போது திருச்சியில் தனி ஆவர்த்தனம் செய்து வரும் இவர் பின்னால் நிறைய இளைஞர்கள் உள்ளனர். ராமஜெயம் பாணியில் கொல்லப்பட்ட புல்லட் மனோகர் என்பவர் கொலை வழக்கில் உள்ளதால், போலீஸ் சந்தேக வலையில் இவர் இருந்தார். கொலை, கொள்ளைச் சம்பவங்களை முடித்தால், மாணவர்களுடன் தங்கிக்கொள்வது இவரது ஸ்டைல்.  திருச்சி கீழசிந்தாமணி ஒடத்துறை அருகே ரவுடி சசிகுமார் கொலை உள்ளிட்ட 18 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இவர் மீது உள்ளது. இதுவரை 5முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, விடுதலையானவர், போலீஸாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கு மற்றும் கொலை வழக்கு உள்ளிட்டவரை ஏராள்ளம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவரைப் போலீஸ் என்கவுன்டர் செய்யத் திட்டமிட்டிருப்பதாக, சுந்தரபாண்டியனின் மனைவி காயத்ரி புகார் கிளப்பினார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 2-ம் தேதி புதுக்கோட்டை திருச்சி பெரம்பலூர் துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சுந்தரபாண்டியன் உள்ளிட்ட மூன்று பேரை மாத்தூர் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கார் , 3 டூ வீலர் , 32 பவுன் தங்க நகை , ரொக்கப் பணம் ரூ.44,000 ஆகியவை பறிமுதல் செய்த செய்தனர். இவர்களது குற்ற சம்பவத்திற்கு உதவிய புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளி ஒருவர் துணையாக இருந்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ரவுடிகளான மண்ணச்சநல்லூர் குணா மற்றும் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.