அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?

சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?

- கே.சந்துரு, முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

முன்குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பணியாற்றிய டி.சங்கர் தன்னை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ம் தேதி நடந்தது. இதில் நீதிபதிகள், “சட்டப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனம் எப்படி நடைபெறுகிறது என்று எங்களுக்கும் தெரியும். தனியார் ஓட்டலில் எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து, துணைவேந்தர் கட்சிக்காரரைப் போல செயல்படுகிறார். இதுகுறித்து எங்களை ஏதும் பேச வைக்காதீர்கள்” என்று கடுமையாக விமர்சனத்தைப் பதிவுசெய்திருந்தனர். அதையொட்டி முன்னாள் நீதிபதியான கே.சந்துரு எழுதியிருக்கும் கட்டுரை இது.

“கனவான்களே, சீமாட்டிகளே! இன்று வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துகொண்ட நீங்கள், இனிமேலாவது சட்டப் புத்தகங்களைப் புரட்டிப்பாருங்கள்” - வக்கீலாகப் பதிவுசெய்துகொண்ட தினத்தன்று, பார் கவுன்சில் தலைவர் எங்களுக்குக் கொடுத்த அறிவுரை இது. அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஆயிரக்கணக்கான சட்டக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் சட்டப் பட்டதாரிகள், சட்ட உலகுக்குள் இப்படிதான் நுழைக்கப்படுகிறார்கள். இப்போது மீண்டும் ஒருமுறை சட்டக்கல்வியைப் பற்றியும், அதில் கற்பிக்கும் சட்ட ஆசிரியர்களின் தகுதியின்மையைப் பற்றியும் உயர் நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டுள்ளன. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் வழக்கில் கொண்டுவரப்பட்ட தகவல்கள் அடிப்படையில் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் தகுதிகளை அறிய முற்பட்டார். அதற்கு பிப்ரவரி 20-ம் தேதி அன்று காலை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தடைவிதித்துவிட்டது. மீண்டும் ஒருமுறை சட்டக்கல்லூரி ஆசிரியர்களின் தகுதி பற்றிய சோதனை தடுக்கப்பட்டுள்ளது துர்பாக்கியமே.

சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?

நமது சட்டக் கல்வி நிலையங்களின் வரலாற்றைப் பார்ப்போம். பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி சுதந்திரம் பெறும்வரை தென்னிந்தியாவுக்கே சென்னையில் இருந்த சட்டக்கல்லூரிதான் ஒரேஒரு சட்டக் கல்லூரி. சுதந்திரத்துக்குப் பின்னரும் முப்பது வருடங்களுக்கு தமிழ்நாட்டுக்கே ஒரே ஒரு சட்டக் கல்லூரியாக இருந்தது அது மட்டுமே. பின்னர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒன்பது அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் செயல்பட்டன. இவற்றையெல்லாம் வழிநடத்திச்செல்ல அம்பேத்கர் பெயரில் ஒரு சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கூடவே, அந்தப் பல்கலைக்கழகத்தின் நேரடி மேற்பார்வையில் சீர்மிகு சட்டப் பள்ளியும் உருவாக்கப்பட்டது. இவை தவிர, ஸ்ரீரங்கத்தில் ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கலவரத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், புதிய இரண்டு சட்டக் கல்லூரிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு, நூற்றாண்டைக் கடந்த சென்னை சட்டக் கல்லூரி நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் ஆறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தனியாக சட்டக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்திவருகின்றன. இருப்பினும் சட்டக் கல்லூரிகளின் தரம் என்ன, சட்டப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களின் தகுதி என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.

மற்ற மாநிலங்களின் நிலைமை என்ன என்று பார்ப்போம். இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலுடன் நடத்தப்பட்டுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் 300, ராஜஸ்தானில் 200, டெல்லி மற்றும் கர்நாடகத்தில் தலா 100, மராட்டியத்தில் 200, மத்தியப் பிரதேசத்தில் 125, ஆந்திராவில் 65, கேரளத்தில் 30 என்று பட்டியல் நீள்கிறது. அவற்றில் 800-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. இவை தவிர, 14 தேசிய சட்டப் பள்ளிகளில் அகில இந்திய திறனறித் தேர்வுகள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.  

பகுதி நேரமாக நடைபெற்ற சட்டக் கல்லூரிகள், பார் கவுன்சில் முடிவின்படி முழுநேர கல்லூரிகளாக மாற்றப்பட்டன. மாலைநேர சட்ட வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. பட்டம் பெற்ற பிறகு மூன்றாண்டுகள் சட்டக் கல்வி, திறமையான வக்கீல்களை உருவாக்கவில்லை என்ற காரணத்தால் மேனிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் நேரடியாக ஐந்து வருட பட்டப்படிப்பு படிக்கலாம் என்ற புதிய விதிமுறை வகுக்கப்பட்டது. கல்லூரியிலேயே நீதிமன்ற அனுபவத்துக்காக மாதிரி நீதிமன்றங்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் இருக்கும் பல ‘உப்புமா’ கல்லூரிகளில் உருவாகும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களால், மொத்தத் துறையின் வழக்கறிஞர்களின் தகுதிகளும் கேள்விக்குறியாகின. இதைக் களைய, வக்கீல்களாகப் பதிவுசெய்வதற்கு முன்னால், தகுதிக்காண் நுழைவுத் தேர்வை பார் கவுன்சில் நடத்துகிறது. இதில் அவர்களது குற்றப்பின்னணிகளும் ஆராயப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

சரி, ஏன் இந்த தகுதிக் குறைபாடு? எந்தத் தொழில் படிப்பும் கிடைக்காத பட்சத்தில் சட்டக் கல்லூரியில் படிக்கலாம் என்ற நிலைதான் இன்று உள்ளது. சட்டக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் அக்கல்வி மீது ஆர்வம் உள்ளதா என்கிற சோதனைகூட செய்யப்படுவதில்லை. இது தவிர, சட்டப் பல்கலைக்கழகங்கள் இரண்டுமே வெளிநாட்டில் வாழும் இந்தியரின் உறவினர்கள் என்ற ஒதுக்கீட்டின்கீழ் பல உள்ளூர் நபர்களை பணம் பெற்றுக்கொண்டு சேர்த்திருப்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. முன்னாள் துணைவேந்தர் ஒருவர்மீது இதுதொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்தால்தான் துணைவேந்தர் பதவி என்பது வாடிக்கையாகி விட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தனது டாக்டர் பட்டத்துக்காக சமர்ப்பித்த ஆய்வுரை 88 சதவிகிதம் காப்பியடித்தது அம்பலமானப் பின்பு, அவர் அந்தப் பதவியிலிருந்து துரத்தப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

கட்டமைப்பு வசதிகள் குறைவு மட்டுமல்லாமல், சட்டம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் தகுதியும், திறமையும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பல கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமித்து, பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்குவதில்லை. பகுதி நேர ஆசிரியர்கள், கௌரவ ஆசிரியர்கள், முழுநேரத் தொழில் நடத்தும் வக்கீல்களின் சிறப்புரைகளைக்கொண்டு சட்டக் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. நீதிபதி சண்முகம் ஆணையம்,  2008-ம் வருடம் சட்டத்தேர்வில் 36 சதவிகிதமே தேர்ச்சிபெற்றதைச் சுட்டிக்காட்டி, ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் என்று குறிப்பிட்டது. 33 பேருக்கு பதிலாக 18 முழுநேர ஆசிரியர்களும், 25 பேருக்கு பதிலாக 14 பகுதி நேர ஆசிரியர்களும் பணிபுரிவதைக் குறிப்பிட்ட கமிஷன், உடனடியாக தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கப் பரிந்துரைத்தது. ஆனால், இன்றுவரை அரசு அதை நிறைவேற்றவில்லை.

சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?

பார் கவுன்சிலின் மேற்பார்வையில் சட்டக் கல்வியை சீர்படுத்த முடியவில்லை என்பதால் புதிய மேற்பார்வைக் குழுவை உருவாக்கும்வகையில் மத்திய அரசு சட்டம் இயன்ற முயன்றது. இதற்கு பார் கவுன்சிலும், வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. 2008-ம் ஆண்டு நானும் தலைமை நீதிபதியும் அடங்கிய அமர்வு சட்டக் கல்வியின் தரம் தாழ்ந்துபோவதை குறைக்கும்விதமாக சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு அமைத்து, பரிந்துரை செய்ய உத்தரவிட்டோம். பத்தாண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. அக்குழுவின் பரிந்துரைகள் இதுவரை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. நான் சட்டப்பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட காலத்திலும், இதுபற்றி கேள்வி எழுப்பியும் அதற்கும் பதில் இல்லை.

2008-ம் வருடம் சட்டப் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்களில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்று தீர்ப்பு அளித்தேன். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த பல்கலைக்கழகம்,  பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களே இல்லை என்று கூறி ஒருமுறை சிறப்புத் தவிர்ப்பு (Special Exemption) பெற்று அந்நியமனங்களைச் சட்டபூர்வமாக்கியது. சிறப்புத் தவிர்ப்பு ஒருமுறை என்பதே இன்று நிரந்தரமாகிவிட்டதைத்தான், தற்போது உயர் நீதிமன்றம் முன்னால் உள்ள வழக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. தனி நீதிபதி முன், முன்னாள் பதிவாளர் சமர்ப்பித்த பிரமாண வாக்குமூலத்தில் 24-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அப்பதவி வகிக்க கல்வி மற்றும் அனுபவத் தகுதி இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது. இதை மேலும் விசாரித்து சட்டக் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதையும், ஆசிரியர்களின் தகுதியை உறுதிசெய்வதையும் இரு நீதிபதிகள் அடங்கிய  அமர்வு மீண்டும் ஒருமுறை ஒத்திவைத்துள்ளது.

வெளிநாட்டில் பயிற்சிபெற்ற வக்கீல்களும், இந்திய நீதிமன்றங்களில் பணியாற்ற அனுமதிக்கலாம் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றன. இப்படியான சூழலில், சட்ட உலகின் சவால்களைச் சமாளிக்க, சட்டப் பயிற்சி அளிக்கும் தேவை, சட்டக் கல்லூரிகளுக்கு எழுந்துள்ளது. அதனால், சட்டக் கல்லூரி ஆசிரியர்களின் தகுதி குறித்து நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும்.