Published:Updated:

`150 ஆண்டுகால வரலாறு; கடலூர் மாவட்ட நீதிமன்றத்திற்குச் சிறப்பாக விழா' - தலைமை நீதிபதி பேச்சு!

`150 ஆண்டுகால வரலாறு; கடலூர் மாவட்ட நீதிமன்றத்திற்குச் சிறப்பாக விழா' - தலைமை நீதிபதி பேச்சு!
`150 ஆண்டுகால வரலாறு; கடலூர் மாவட்ட நீதிமன்றத்திற்குச் சிறப்பாக விழா' - தலைமை நீதிபதி பேச்சு!

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்புகளைச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி திறந்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் அனைத்து நிகழ்ச்சிகளும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடந்தது. இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி பேசியதாவது, `` கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் நடராஜர் திருக்கோயில்கள் போல் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்கள் உள்ளன. சிதம்பரம் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் சுமார் ரூ.24.16 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்ட நீதிமன்றம் 150 ஆண்டுகாலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான விழாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். சிதம்பரத்தில் சார்பு நீதிமன்றம் ஒன்று உள்ளது. மேலும் கூடுலாக ஒரு சார்பு நீதிமன்றம் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்றங்களில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு உபகரணங்கள் அமைய உள்ளன. நீதிமன்றங்கள் மூலம் பொதுமக்களுக்கு உடனடியாக நீதி வழங்கத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு புதிய  நீதிமன்றங்களையும், நீதிமன்ற கட்டடங்களையும் மற்றும் நீதிமன்றங்களுக்கான பிற வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுப்பதின் நோக்கம் பொதுமக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்" என்றார்.

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது, ``கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் துவக்கி வைக்கப்படும் இவ்விழாவில் கலந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். கடந்த 25.01.2017 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூ.20.11 கோடி செலவில் கட்டுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு ஆணைப் பிறப்பித்தது. இவ்வாணையைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக முதல்வருக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு 2011 முதல் கடந்த 7 வருடங்களில் 41 இடங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.527.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும் தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுமட்டும் இன்றி நீதிமன்றங்களுக்குப் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். தற்பொழுது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் நடைபெற்று வரும் இவ்வரசு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நீதி  நிர்வாகத்துக்கு ரூ.934.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாகும்" என்றார்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது, ``இன்றைய தினம் நடைபெறும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு கட்டடங்கள் திறந்து வைக்கும் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தமிழக அரசால் ரூ.24.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைத்தமைக்கு தமிழக அரசுக்கும், நீதிமன்ற நிர்வாகத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். புதிய நீதிமன்ற கட்டடம் மூலம் பொதுமக்களின் நீண்டகால வழக்கை உடனடியாக முடித்து வைத்து உரிய நீதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
 
இதில் பொதுப்பணித்துறையின் மேற்பார்வை பொறியாளர் ஆர்.ராஜவேல் திட்ட அறிக்கை வாசித்தார். முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி கல்வெட்டைத் திறந்து வைத்தார். இவ்விழாவுக்கு வருகை புரிந்த அனைவரையும் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி வரவேற்றுப் பேசினார். விழாவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர காசி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் ரவி  நன்றி கூறினார்.