Published:Updated:

மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?
பிரீமியம் ஸ்டோரி
மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்

மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்

Published:Updated:
மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?
பிரீமியம் ஸ்டோரி
மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

னுநீதி சோழனின் அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் குறை கேட்டு தன் மகனென்றும் பார்க்காமல், அவனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றதாகக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், ஆராய்ச்சி மணி அடித்த பசு, மனுநீதி சோழன் மீதே புகார் கூறியிருந்தால், அந்தப் புகாரை யார் விசாரித்திருப் பார்கள்? யாரேனும் விசாரித்திருந்தாலும் மன்னன்மீது எத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்க முடியும்? ‘மன்னன் தவறிழைக்கவே முடியாது’ என்றுதான் கூறுவார்கள். அது மன்னராட்சி. ஆனால், ஜனநாயகக் குடியரசான நம் நாட்டில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதே புகார் சொன்ன ஒரு பெண்ணின் புகாரை அவரே விசாரிக்க முற்பட்டது கேலிக்கூத்தாகும்.

மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பெண் ஊழியர் ஒருவரின் பாலியல் சீண்டல் புகார், உச்ச நீதிமன்றத்திலுள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், அன்றைய தினமே நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மறுப்பு அறிக்கை வருகிறது. உண்மையில், புகார் வந்தவுடன் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தடுப்புத் தடை மற்றும் தீர்வு சட்டம் 2013-ன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர்த்த அனைத்து நீதிபதிகளும் அடங்கிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி அல்லாமல் முதல்நாள் தலைமை நீதிபதியின் தலைமையில், மற்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு பட்டியலிடப் படுகிறது.

நீதிமன்றமே சுயமாக எடுத்துக் கொண்ட அந்த வழக்கில், மனுதாரர்கள் யாருமில்லை. ‘நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பற்றிய பொது முக்கிய வழக்கு’ என்று அதற்குத் தலைப்பிட்டிருந் தார்கள். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலும் சொலிசிடர் ஜெனரலும் ஆஜராகியிருந்தனர். வழக்கைப் பற்றி தலைமை நீதிபதி வருத்தத்துடன் கூறுகிறார். மத்திய அரசின் இரண்டு தலைமை வழக்கறிஞர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். புகார் அளித்த பெண் ஊழியருக்கு அறிவிப்பு கிடையாது. ஆஜர் ஆக்கப்படாமலேயே அவர் தண்டிக்கப்படுகிறார். தனக்கு எதிராக மிகப் பெரும் சதித் திட்டம் தீட்டப்படுவதாகவும் தன் வாழ்க்கையில்  எப்போதுமே நேர்மையாக இருந்துள்ளதாகவும் தலைமை நீதிபதி தன்னிலை விளக்கம் அளிக்கிறார். உடனே உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஆனால், அந்த உத்தரவில் தலைமை நீதிபதியின் கையெழுத்து கிடையாது. மற்ற இரு நீதிபதிகளும் மட்டுமே கையொப்பமிடுகிறார்கள். இப்படி ஒரு சம்பவம் உச்ச நீதிமன்றத்தின் 69 வருட வரலாற்றில் நடந்ததே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

அடுத்த நாள் நிகழ்வு இன்னும் திகிலடைய வைக்கிறது. பெயின்ஸ் என்ற வக்கீல், ‘தலைமை நீதிபதிக்கு எதிராக மிகப் பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது; சதிகாரர்கள் எனக்குப் பெருந்தொகை அளித்து உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள்’ என்று ஃபேஸ்புக்கில் கூறுகிறார். அடுத்தநாள் ஒரு வாடகை வண்டியில், உச்ச நீதிமன்றம் செல்லும் அவரை, உச்சகட்ட பாதுகாப்பையும்மீறி உள்ளே அனுமதிக்கிறார்கள். மீண்டும் வேறு மூன்று நீதிபதிகள் தலைமையில் மற்றொரு அமர்வு. அந்த அமர்வில், அந்த வக்கீல் ஆஜராகவில்லை. ஆனால், மாலையில் தாக்கல்செய்த வழக்கு உடனடியாகப் பட்டியலிடப்படுகிறது. அதன் தலைப்பு, ‘நீதிமன்றத்துக்கு எதிராகத் தீட்டப்படும் மாபெரும் சதி குறித்த புகார் பற்றிய வழக்கு’. உடனடியாகப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நான்கு துறைகளிலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுவதாக அட்டர்னி ஜெனரல் புகார் எழுப்புகிறார். அவரிடம் கடின வார்த்தைகளில் மறுதலிக்கிறார் வழக்கறிஞர் பெயின்ஸ். இந்நிலையில், பெயின்ஸை நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றப் போவதாக நீதிபதி ரோஹின்டன் நரிமன் எச்சரிக்கிறார். ஆனால், ‘நீங்கள் அனுப்பும் முன் நானே போய்விடுகிறேன்’ என்று பெயின்ஸ் கூற... மற்றொரு நீதிபதி, பெயின்ஸை சமாதானப்படுத்துகிறார். இல்லை எனில் மாபெரும் சதி பற்றி அறியாமல் போய்விடுமே!?

அடுத்தநாள் தலைமை நீதிபதியின் உத்தரவில், பாலியல் சீண்டல் புகார் குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட உள்விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. தன்மீது கூறப்பட்ட புகாருக்கு தானே ஒரு குழுவை அவர் எப்படி அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ‘விசாரணைக் குழுவின் முன்னால் நான் ஆஜராக மாட்டேன். ஏனெனில், குழுவிலிருக்கும் நீதிபதி களில் ஒருவர், தலைமை நீதிபதியின் நெருங்கிய நண்பர். அதனால் அவர் அந்தக் குழுவில் இருக்கும்வரை எனக்கு நீதி கிடைக்காது’ என்று அந்தப் பெண் ஊழியர் தெரிவிக்கிறார். உடனே நீதிபதி என்.வி.ரமணா விலகுகிறார். மற்றொரு பெண் நீதிபதி, குழுவின் அங்கமாக்கப்படுகிறார். இப்படி ஒரு கடைநிலை பெண் ஊழியர் அனுப்பிய புகார் கடிதத்துக்கு, மூன்று தினுசான குழுக்கள் மூன்று தலைப்புகளில் ஆராய முன்வந்துள்ளது எங்கேயுமே கேள்விப்படாத புதிர். சிக்கலான காலங்களில் சரியான முடிவு எடுப்பதற்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமைக்கே தடுமாற்றம் இருப்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.

உண்மை என்ன என்று தெரிய முற்படுவதற்கு முன்னால் அதை அறிவதற்கான நடைமுறையில் தூய்மையும், தெளிவான போக்கும் வேண்டும். விசாகா வழக்கில், (1997) பணியிடங்களில் பாலியல் சீண்டல்களைத் தடுக்கும் நடைமுறை விதிகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கியபோது, ‘அது உயர்மட்ட நீதித்துறைக்கு... குறிப்பாக, நீதிபதிகளுக்குப் பொருந்தாது’ என்ற வாதம் வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண் ஊழியர் பாலியல் சீண்டல் புகார் கொடுத்தபோது, அன்றைய தலைமை நீதிபதி விசாகா தீர்ப்பின்படி குழு அமைக்க மறுத்துவிட்டார். அதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘அந்த விதிகள் சாதாரண தொழிலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கானது’ என்று விசித்திரமான விளக்கத்தை அளித்தார். அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் ஊழியர் அளித்த சாட்சியத்தின்படி தலைமைப் பொறுப்பிலிருந்த ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்தப் பணிநீக்கத்தை இரு நீதிபதிகள் அமர்வு ரத்துசெய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம், பணிநீக்கத்தை உறுதிசெய்து, நீதிமன்றங்கள் விசாகா தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் முடிவுகளில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டது.

இச்சமயத்தில்தான் 2013-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தடுப்பு மற்றும் தீர்வு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்குள் உச்ச நீதிமன்ற நீதிபதி கங்குலியின் மீதே பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் சீண்டல் புகார் அளித்தார். இதையொட்டி இந்தச் சட்டம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்று கூறியது. நீதிபதி கங்குலி ஓய்வுபெற்ற பின்னரும் அவர்மீது புகார்க் குழு விசாரணை நடத்தியது. இந்தக் காலகட்டத்தில் மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதிமீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. அதை ஊடகம் வெளியிட முற்படவே... அந்த நீதிபதி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி எந்த ஊடகமும் சமூக வலைத்தளங்களும் தன் பெயரை பதிவிடக் கூடாது என்று முன் தடை உத்தரவு பெற்றார். அதனால் தான் அவரது பெயரை இங்கே நான் பதிவுசெய்ய முடியவில்லை. ஆனால், அவர்மீது ஒரு பெண் அளித்த புகார் என்ன ஆயிற்று என்று இன்றுவரை தெரியாது. இப்படியான சூழலில்தான் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம், ‘தலைமை நீதிபதி கோகோய் மீதான புகாரைப் பற்றி எந்தப் பிரசுரங்களும் வெளியிடக்கூடாது. அது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும்’ என்று போடப்பட்ட வழக்கை நிராகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டாரா?

உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் புகாரில் உண்மை இருக்கிறது என்று, தான் நம்புவதாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. புகாரை விசாரிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பம். ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதே சுமத்தப்பட்டுள்ள இப்புகாரை அவருடைய சக நீதிபதிகள் அடங்கிய குழு எப்படி விசாரிக்கப்போகிறது? அதற்கான நடைமுறை விதிகள் எவ்வாறு இருக்கும்? தலைமை நீதிபதியையே அந்தக் குழு, குறுக்கு விசாரணை செய்யுமா? தலைமை நீதிபதியின் மனைவியை விசாரிப்பார்களா? பெண் ஊழியர் கூறிய புகாரைப் பற்றி மேலும் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு காவல்துறையின் உதவியை நாடுவார்களா? பாலியல் சீண்டல் பற்றிய விசாரணைக் குழுவின் முடிவு, தலைமை நீதிபதியைக் கட்டுப்படுத்துமா? அந்தக் குழுவின் முடிவுக்கு எதிராக 2013-ம் வருடச் சட்டத்தின் 18-வது பிரிவின்படி எந்த மேல் முறையீட்டு மன்றத்திடம் மேல்முறையீடு செய்ய முடியும்?... எனக் கேள்விகள் எழுகின்றன. புகாரில் உண்மை இருக்கிறது என்றால் மறுபடியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் கூட்டி தலைமை நீதிபதியின்மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து, குடியரசுத் தலைவர் உத்தரவின்படிதான் அவரைப் பதவி நீக்க முடியும்.

இவை எல்லாம் இந்த நாட்டில் நடக்கக்கூடிய விஷயங்களா? உள் விசாரணைக் குழு, தான் நடத்தப்போகும் விசாரணையின் நடைமுறை விதிகளை வரையறுத்துக் கூற மறுத்ததுடன், புகார் கூறிய பெண்ணுக்கு வக்கீல் வைத்து வாதாடவும் அனுமதியை மறுத்துவிட்டார்கள். மேலும், விசாரணை நடவடிக்கையை ஒலி/ஒளி பதிவு செய்யவும் மறுத்துவிட்டார்கள். தலைமை நீதிபதி தனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்திப் பதிவுகளைத் தொலைபேசி நிறுவனத் திடமிருந்து வரவழைக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டதையும் மறுத்துவிட்டனர். இதனால், அப் பெண் விசாரணையிலிருந்தே தன்னை விலக்கிக்கொண்டுவிட்டார்.

2013-ம் வருட சட்டத்தில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிர்வாகம் அனைத்து விதத்திலும் உதவிசெய்ய வேண்டும்’ என்று கூறப் பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு வகுத்த உபவிதிகளில், உள்விசாரணையில் வக்கீல் வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது. இருப்பினும் சட்டத்தைக் கரைத்துக் குடித்த மூன்று நீதிபதிகள் மற்றும் புகாருக்கு உட்பட்டவர் இந்திய நீதித்துறையின் தலைவர் இவர்களை எல்லாம் ஒரு கடைநிலை ஊழியரால் எதிர்கொள்ள முடியுமா? உச்ச நீதிமன்றம், புகார் கூறிய பெண்ணுக்குப் போதிய தற்காப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ‘புகார் கூறிய பெண் வெளிநடப்பு செய்தாலும் புகார்தாரரை தோன்றாத் தரப்பாக வைத்து விசாரணை நடைபெறும்’ என்று விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது. ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்வதற்கு, விதிமுறைகள் இருந்தாலும் ஒருதலைப்பட்சமாக நீதி அளிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை.

அதனால்தான், ‘மன்னர் எப்போதுமே தவறிழைக்க மாட்டார்’ என்று கூறி வைத்துள்ளனர்!