Published:Updated:

`பொதுவாழ்வை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு!’ - நீதிமன்ற உத்தரவால் காப்பாற்றப்பட்டது கருத்து சுதந்திரம்

ஜெனிஃபர்.ம.ஆ
`பொதுவாழ்வை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு!’ - நீதிமன்ற உத்தரவால் காப்பாற்றப்பட்டது கருத்து சுதந்திரம்
`பொதுவாழ்வை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு!’ - நீதிமன்ற உத்தரவால் காப்பாற்றப்பட்டது கருத்து சுதந்திரம்

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான  ஊழல் புகார்களை வரிசையாக  வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, அது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல வழக்குகளைத் தொடர்ந்தது அறப்போர் இயக்கம். தனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக, போர்க்கொடி உயர்த்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறப்போர் இயக்கம் மீது உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விவரங்களை அறப்போர் இயக்கம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தன்வி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதமும், நவம்பர் மாதமும், அரசு டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இதர பல கான்ட்ராக்டர்கள் ஆகியோர் மீது ஆதாரபூர்வமான ஊழல் புகார்களை அறப்போர் இயக்கம் முன்வைத்தது. இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

சட்ட ரீதியாகப் பார்த்தோமேயானால், அவதூறு வழக்கு என்பது, தன் மீது ஏற்பட்ட கலங்கத்துக்காக நஷ்டஈடு கோரி தொடரப்படுவது. இதில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, தொடர்ந்து தன் பெயருக்குக் குந்தகம் வரக்கூடாது என்பதற்காக, இந்த அவதூறு வழக்கின் இடைக்கால உத்தரவு (Interim Order) கோரி வழக்கு தொடரப்படும். இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட நபர், வழக்கு தொடர்ந்தவர் பற்றி எந்தவிதமான கருத்தும் கூறுவதற்குத் தடை விதிக்கப்படும்.

இந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில், அறப்போர் இயக்கம் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதால், தன்னைப் பற்றி மீடியாவிடம் பேசுவது, செய்தி வெளியிடுவது ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்கும்படி, உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களின், பொது வாழ்வைப் பற்றிய கருத்துகளைப் பதிவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது எனவும், அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றி அவதூறு பரப்பினாலே இத்தகைய இடைக்கால தடை விதிக்க முடியும், என முந்தைய வழக்கு மேற்கோள்களைக் காட்டிய என்னுடைய வாதத்துக்கு நீதிமன்றம் செவிமடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், அறப்போர் இயக்கத்துக்கு எதிராக  இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும், அவதூறு வழக்கு குறித்த விசாரணையை மார்ச் மாதம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்" என்றார். 

இவ்வழக்கு பற்றிப் பேசிய அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன், ``அவர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் குற்றங்கள் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எதன் அடிப்படையில், அவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை, வழக்கு சம்பந்தமாக எங்களுக்கு அழைப்பாணை எதுவும் வரவில்லை. எங்களுக்கு இவ்வழக்கு குறித்து தெரியப்படுத்தாமலேயே, அவர்கள் இடைக்கால தடைபெற முயன்றபோதுதான், இதுகுறித்து தகவல் அறிந்து எங்கள் வழக்கறிஞர் சரியான சமயத்தில் ஆஜரானார். அமைச்சர் தவிர தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் பல கான்ட்ராக்டர்கள், அவர்களின் ஊழல் குறித்து நாங்கள் ஆவணம் வெளியிட்டதற்காக எங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்குகளையும் நாங்கள் சட்டபூர்வமாக கையாளுவோம்" என்றார்.

இத்தகைய அவதூறு வழக்குகள், பொதுமக்களின், இயக்கங்களின், ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்குபவை. இந்த நிலையில், இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்திருப்பதன் மூலமாக, எல்லோருக்குமான கருத்து சுதந்திரத்தை நீதிமன்றம் காத்திருக்கிறது என்றே சமூக ஆர்வலர்கள் பலரும் சந்தோஷப்படுகிறார்கள்.