
அடுக்குமாடி வீடு... தாமதமானால் ரீஃபண்ட் கேட்கலாம்!
அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்காகப் பணம் செலுத்தியவர்கள், குடியிருப்பினைப் பெற ஓராண்டுக்கு மேல் தாமதமானால் ரீஃபண்ட் கேட்கலாம் என என்.சி.டி.ஆர்.சி (National Consumer Disputes Redressal Commission - NCDRC) தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் பிரேம் நரைன் வழக்கு ஒன்றில் இப்படித் தீர்ப்பளித்திருக் கிறார்.

டெல்லியைச் சேர்ந்த ஷாலாபா நிகாம் என்பவர், கடந்த 2012-ம் ஆண்டில் கூர்கானில் சொகுசு குடியிருப்பு ஒன்றை ஓரிஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் 3சி கம்பெனியிடமிருந்து வாங்கினார். அடுக்கு மாடி வீட்டின் விலை ரூ.1 கோடியாக இருந்தது. ஷாலாபா நிகாம் ரூ.90 லட்சத்தை பில்டருக்குக் கொடுத்துள்ளார்.
ஒப்பந்தப்படி பில்டர், 36 மாதங் களுக்குள் வீட்டைக் கட்டி முடித்து ஒப்படைத்திருக்க வேண்டும். இதற்கான கருணைக் காலம் ஆறு மாதங்களாக இருந்தது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பில்டர், வீட்டைக் கட்டித் தரவில்லை. இந்த நிலையில், என்.சி.டி.ஆர்.சி-யில் தனது வழக்கறிஞர்மூலம் வழக்குத் தொடர்ந்தார் நிகாம். வீட்டைக் கட்டிமுடித்து உடனே ஒப்படைக்க வேண்டும் அல்லது கட்டிய தொகையைத் திரும்ப வழங்கவேண்டும் என்று கேட்டார் நிகாம்.
2019 செப்டம்பருக்குள் வீட்டைக் கட்டி ஒப்படைக்க வேண்டும். காலதாமதமான ஆண்டுகளுக்கு மொத்தத் தொகைக்கு 6% வட்டியுடன் திரும்பத் தரவேண்டும் என கமிஷன் தீர்ப்பளித்தது. கமிஷன் சொன்ன கெடு வுக்குள் வீட்டைக் கட்டித் தரவில்லையெனில், மொத்தத் தொகைக்கு 10% வட்டியுடன் பணம் தர வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி வாங்குபவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு இது என்பதில் சந்தேகமில்லை!
சேனா சரவணன்