Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 9-வது கட்ட விசாரணை நிறைவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 9-வது கட்ட விசாரணை நிறைவு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 9-வது கட்ட விசாரணை நிறைவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், தனது 9-வது கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இதுவரை 246 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில், கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீஸார் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய, தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்து உத்தரவிட்டது.

இந்த ஒருநபர் ஆணையம், கடந்த ஜூன் 4-ம் தேதியிலிருந்து விசாரணையைத் தூத்துக்குடியில் தொடங்கியது. பின்னர் பொதுமக்கள், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் என பலரிடம் பிரமாணப் பத்திரங்கள் பெறப்பட்டது. அதன்பின், தூத்துக்குடி அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள, ஆணையத்தின் முகாம் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கெனவே இந்த ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட 3 மாத விசாரணைக் காலம் முடிவடைந்த நிலையில், விசாரணை செய்திட கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் அளிக்கும்படி அரசிடம் ஆணையம் கோரிக்கை வைத்தது. இக்கோரிக்கையை ஏற்ற அரசு, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதல் அவகாசத்துடன் செயல்பட்டு வருகிறது.  

இதுவரை 8 கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், 9-வது கட்ட விசாரணை கடந்த 12-ம் தேதி துவங்கி இன்றுடன் (15.3.19) நிறைவு பெற்றது. ``9-வது கட்ட விசாரணையில், 70 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்து. இதில், 53 பேர் ஆணையத்தின் முன் ஆஜராகி நேரடி சாட்சியம் அளித்தனர். இதுவரையில் நடந்த 9 கட்ட விசாரணையில், மொத்தமாக 246 பேரிடம்  விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10-வது கட்ட விசாரணை, அடுத்த மாதம் (ஏப்ரல்) 8 முதல் 10-ம் தேதி வரை  நடைபெற உள்ளது.” என ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.