Published:Updated:

``விரிவான விசாரணை!” - ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

பிரேம் குமார் எஸ்.கே.
``விரிவான விசாரணை!” - ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
``விரிவான விசாரணை!” - ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

'ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறு சீராய்வு மனுவை நிராகரிக்க வேண்டும்' என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்,  சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்தம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஃபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக, ஆளும் பா.ஜ.க அரசுமீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்த நிலையில், அது தொடர்பான மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 

இந்த விவகாரத்தில், 'பத்திரிகைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தக் கூடாது' என்று மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த நிலையில், மத்திய அரசின் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 'ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், ஆவணங்கள்மீது விரிவான விசாரணை நடத்தப்படும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ரஃபேல் வழக்கில் இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, மறுசீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரஃபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அணில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு. 

தேர்தல் நேரத்தில், ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வுக்கு எதிரான தங்களின் பிரசாரத்தில் ரஃபேல் விவகாரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.