Published:Updated:

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!

பி.ஆண்டனிராஜ்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின்  100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், நான்கு மாத காலத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை மந்த கதியிலேயே நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று (ஜூன் 26) பேசிய தூத்துக்குடி தொகுதி எம்.பி-யான கனிமொழி, ’’ ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஓராண்டைக் கடந்த பின்னரும் சிபிஐ விசாரணை முடிவடையவில்லை. நான்கு மாதத்தில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு 10 மாதங்களாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

முதல் தகவல் அறிக்கையில் ஒரு போலீஸார் பெயர்கூட இடம்பெறவில்லை. அதனால், இந்த விசாரணை பொதுமக்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். 

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்’ என்று சிபிஐ சார்பில் டிஎஸ்பி ரவி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு - நீதிமன்ற உத்தரவுக்கு மக்கள் வரவேற்பு!

அப்போது, ’தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ  சார்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் நிலைகுறித்து, செப்டம்பர் 15-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. 

இதுகுறித்து துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பேசுகையில், ‘’துப்பாக்கிச்சூடு தொடர்பாகத் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு சொன்னதை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு முடித்துக்கொண்டது. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையும் இன்னும் முடிவடையவில்லை.

நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிபிஐ விசாரணையும் மெதுவாகவே உள்ளது. ஆனால், இந்த விசாரணைகுறித்த அறிக்கையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விசாரணை வேகம் எடுக்கும். மக்கள் மன்றமான நாடாளுமன்றத்தில் கனிமொழி நேற்று பேசிய நிலையில், நீதிமன்றம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது’’ என்கிறார்கள். 

Vikatan