Published:Updated:

நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு குறித்த நீதிபதிகள் கருத்து சரியல்ல: கி.வீரமணி

 நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு குறித்த நீதிபதிகள் கருத்து சரியல்ல: கி.வீரமணி
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு குறித்த நீதிபதிகள் கருத்து சரியல்ல: கி.வீரமணி
 நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு குறித்த நீதிபதிகள் கருத்து சரியல்ல: கி.வீரமணி

சென்னை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்ற சிபாரிசு செய்ய முடியாது என நீதிபதிகள் கூறியிருக்கும் கருத்து சரியல்ல என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, போடப்பட்ட பொது நல மனுவின்மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'அப்படி ஒரு ஆணையை பிறப்பிக்க இயலாது' என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி, சமூகநீதிக்காகப் போராடும் இயக்கத்தின் சார்பில் நமது கருத்தை உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் தெளிவுபடுத்தி, வற்புறுத்திட வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

இத்தீர்ப்பில் ஒரு மையக் கருத்து அனைவருக்கும் வாய்ப்புத் தரப்படுதல் நியாயமானதுதான் என்பதை உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மறுக்கவில்லை. இதைப்பற்றி, எடுத்த எடுப்பிலேயே ஒரு கருத்து தெளிவாக்கப்படல் வேண்டும். சமூகநீதி அடிப்படையில், இத்தகைய ஒதுக்கீடுகள் பிரதிநிதித்துவம் என்பது சலுகையோ, பிச்சையோ அல்ல.

மாறாக, அடிப்படை உரிமை அரசியல் சட்டப்படியே என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள 16ஆவது பிரிவு 4ஆவது உட்பிரிவின்படி, “Equality of Opportunity in Matters of Public Employment (1) There shall be equality of opportunity for all citizens in matters, relating to employment or appointment to any office under the state. இந்தப் பிரிவுதான் முக்கியமானது. இதில் உள்ள 4ஆவது உட்பிரிவுகள், சமூகநீதியை நடைமுறைப்படுத்தச் செய்ய துவக்கத்திலிருந்தே அதாவது முதலாவது சட்டத் திருத்தத்திற்கு முன்பிருந்தே இருந்து வரும் பிரிவு 16(4) என்பதாகும்.

அரசியல் சட்ட விதிகள் மேலே கூறப்பட்டுள்ளவைபடி, இது எந்த நியமனத்திற்கும் “Any Office under the State” பொருந்தும் என்பதே நியாயமான பொருளாகும். தகுதி, திறமை பார்க்க இப்படி ஒரு பாதுகாப்பு. அதாவது உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தாது என்று வியாக்யானம் ஒரு தரப்பாரால் கூறப்படுகிறது. இது விசித்திரமான வாதம் ஆகும். எப்படியெனில், அப்படியானால் மாவட்ட நீதிபதிகளுக்கு “தகுதி, திறமை” பார்க்கப்பட வேண்டாமா? வந்தவர்கள் எல்லாம் அவை இல்லாதவர்களா? மாவட்ட நீதிபதிகளிலிருந்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாகி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை செல்லுகின்றனரே, அது எப்படி சரியாக முடியும் தகுதி, திறமைக்கு ஏன் இரட்டை அளவுகோல்?

##~~##
உச்சநீதிமன்றத்தில் இன்றுள்ள 30 நீதிபதிகளில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்தோ, மலைவாழ் மக்களிலிருந்தோ இல்லையே. 66 ஆண்டு சுதந்திரத்தின் பலன் இதுதானா? “கொலிஜியம்’ என்ற பெயரில் அரசியல் சட்டத்தில் இல்லாத ஒன்று மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டு விட்டது என்ற கருத்தும், ‘கொலிஜியம்’ என்பதில் மாநில உயர்நீதிமன்ற மூத்த மூன்று நீதிபதிகளில், மூவருமோ அல்லது இருவரோ வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களாக பெரும்பாலான இடங்களில் இருப்பதால், அவர்களது பரிந்துரை எவ்வளவு புரிந்துரைகளாக இருக்கும் என்பதும் கேள்விக் குறிகளாகும்.
ஆங்காங்குள்ள மக்களின் மண்ணின் மனோபாவம் என்பதையேகூட புரிந்து கொள்ளாது, ஏதோ சில அளவுகோல்களை வைத்து பரிந்துரைப்பது எப்படி நியாயமாக இருக்கும்? எனவே இந்த நியமனங்களில் “வெளிப்படைத் தன்மை”யும் சமூகநீதியும் கட்டாயம் தேவை.  மத்திய அரசு, சமூக நீதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பி.சதாசிவம் நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தேவை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள கருத்தும் இதில் கவனிக்கப்பட்டாக வேண்டும். அரசின் மற்ற பிரிவுகளான நிர்வாகம், சட்டத் துறைக்குப் பொருந்தும் சமூகநீதி, நீதித்துறைக்கும் பொருந்தியாக வேண்டும் அல்லவா. இதுபற்றி ஆங்காங்கு கருத்தரங்குகளை நடத்திட சமூக ஆர்வலர்களும், சமூகநீதிப் போராளிகளும் முன்வர வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.