Published:Updated:

போபால் வழக்கை மீண்டும் விசாரிக்க SC மறுப்பு

புதுடெல்லி, மே 11,2011

போபால் வழக்கை மீண்டும் விசாரிக்க SC மறுப்பு

போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. ##~~##

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவானது என்பதால், இதனை மீண்டும் விசாரிக்கக் கோரும் சிபிஐ-யின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்துடன், எவ்வித திருப்திகரமான விளக்கங்கள் இல்லாமல் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் குறைகூறியுள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

பின்னர், யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் 7-ல் போபால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கார்பைடு நிறுவன முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தான், போபால் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு சிபிஐ சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில், போபால் விஷவாயு வழக்கில் தெரிந்தே பலருக்கு மரணத்தை விளைவிப்பது என்கிற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

இது பின்னர் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் ஏற்பட்ட சாவு என்கிற சட்டப்பிரிவுக்கு குற்றச்சாட்டு மாற்றப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைத்தது. பழைய சட்டப்பிரிவுக்கே குற்றச்சாட்டை மாற்ற வேண்டும் என்று சிபிஐ தனது மனுவில் கூறியிருந்தது.

இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் சிபிஐ-யின் மனுவை இந்த பெஞ்ச் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த மாதம் சிபிஐ சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி, '16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுவது சிபிஐயின் தவறுதான். ஆனால், இந்தத் தாமதத்தைக் காரணம் காட்டி நீதியை மறுக்கக் கூடாது. தவறுக்கு ஏற்ற தண்டனைதான் வழங்கப்பட வேண்டும் என்பது நீதிபரிபாலனத்தின் அடிப்படைக் கொள்கை,' என்று எடுத்துக்கூறியது குறிப்பிடத்தக்கது.