Published:Updated:

இலவச மிக்சிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி, செப்.3,2011

தமிழக அரசு அறிவித்த இலவச திட்டங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ##~~##

அதேவேளையில் இலவச அறிவிப்புகள் தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சுப்பிரமணியம் பாலாஜி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், "தமிழக அரசு அறிவித்து இருக்கும் திட்டம் ஏழை மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம். இதை பாரபட்சம் இன்றி அமல்படுத்துவோம்,'' என்று உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து 'தமிழக அரசு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது' என்று நீதிபதிகள் கூறினர்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.