Published:Updated:

உபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்!

Vikatan Correspondent
உபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்!
உபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்!

புதுடெல்லி, அக்.13,2011

உபார் துயரம்: இழப்பீட்டை குறைத்தது சுப்ரீம் கோர்ட்!

உபார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பாதி அளவில் குறைத்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கடந்த 1997-ல் தெற்கு டெல்லியின் கிரீன் பார்க் பகுதியில் இருந்த உபார் என்ற திரையரங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், 59 பேர் பலியாகினர். தீ பரவியதால் முண்டியடித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது, ஏற்பட்ட நெரிசலில் தான் பெரும்பாலானார் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 20 வயதுக்கு மேற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.18 லட்சமும், 20 வயதுக்குட்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2003-ல் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், ரூ.18 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாகவும், ரூ.15 லட்சம் என்பதை ரூ.7.5 லட்சமாகவும் இழப்பீட்டுத் தொகையை குறைத்து தீர்ப்பளித்தது.

மேலும், சினிமா திரையரங்கின் உரிமையாளர்களாக அன்சால் சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.2.5 கோடியை ரூ.25 லட்சமாக குறைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களே இத்தகைய தீர்ப்பால் பயன் அடைவார்கள் என்றும், மேலும் பல உபார்களுக்கே இது வழிவகுக்கும் என்றும் அவர்கள் குறைகூறியுள்ளனர்.

அதேவேளையில், நாட்டிலுள்ள திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு 'தீ விபத்து ஏற்பட்டால், செய்ய வேண்டியவை எவை? செய்யக்கூடாதவை எவை?' என்பது குறித்து விழிப்பு உணர்வை உண்டாக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்ப வேண்டும் என நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.