Published:Updated:

குற்றாலத்தில் 'குடி'த்து விட்டு குளிக்க முடியாது!

குற்றாலத்தில் 'குடி'த்து விட்டு குளிக்க முடியாது!
குற்றாலத்தில் 'குடி'த்து விட்டு குளிக்க முடியாது!

நெல்லை: குற்றாலத்திற்கு குடிபோதையில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட தாமதமாக சீசன் தொடங்கியது. கடந்த வாரம் குற்றாலம் மலை பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுக்க தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் மலை பகுதிகளில் மழை பெய்யவில்லை. மாறாக குற்றாலத்தில் கடும் வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 2 நாட்களாக மிதமான அளவு தண்ணீரே விழுகிறது.

குற்றாலத்தில் 'குடி'த்து விட்டு குளிக்க முடியாது!

இன்று காலை குற்றாலத்தில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளை கவலையடைய செய்துள்ளது.

இதற்கிடையே குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மது குடித்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, குற்றாலத்திற்கு குடிபோதையில் வருபவர்களை கண்காணிக்க குற்றாலம் போலீசாருக்கு 10 பிரீத் அனலைசர் என்ற அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று டி.எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்–இன்ஸ்பெக்டர் மீராள் பானு ஆகியோர் தலைமையில் போலீசார் குற்றால அருவி பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் மது குடித்துள்ளார்களா? என்பதை கண்டறிய பிரீத் அனலைசர் என்ற கருவி மூலம் சோதனை நடத்தினர்.

அப்போது மது குடித்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து மது குடித்து விட்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவர்களிடம் கூறினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் மது குடித்து விட்டு வருபவர்களை கண்டுபிடிக்க பிரீத் அனலைசர் என்ற கருவி மூலம் கண்காணிக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் மது குடித்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள்’ என்றனர்.