Published:Updated:

பீமா கோரேகன் கலவர வழக்கில் திருப்பம்... அடுத்தடுத்து விலகிய 5 நீதிபதிகள்!

தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிடுமாறு கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் கெளதம் நவ்லாக்கா தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

Supreme court
Supreme court

மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த பீமா கோரேகன் கலவர வழக்கில் கைதானவர், கெளதம் நவ்லாக்கா. இவரோடு சேர்ந்து ஐவர் இவ்வழக்கில் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். கலவரத்தைத் தூண்டியதாகவும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் புனே போலீஸ் கூறியது. மாவோயிஸ்ட்டுகளோடு சேர்ந்து அரசைக் கவிழ்ப்பதற்கான வேலையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இவர்மீது வழக்குப்பதிவு செய்தது.

Bhima Koregaon
Bhima Koregaon

தன்மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உத்தரவிடக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் கெளதம் நவ்லாக்கா மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'போலீஸாரால் பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய முடியாது' என்று கூறி மனுவைத் தள்ளுபடிசெய்தார். மனுதாரர் (கெளதம் நவ்லாக்கா) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்து, இரண்டு வாரங்கள் அவரை போலீஸார் கைது செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

செப்டம்பர் 30-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி போப்டே மற்றும் நீதிபதி அப்துல் நஷீர் அடங்கிய மூவர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

கெளதம் நவ்லாக்கா
கெளதம் நவ்லாக்கா

அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், "இந்த வழக்கை நான் இல்லாத மற்றொரு அமர்வின் முன் விசாரணைக்கு அனுப்புங்கள்" என்ற ஒற்றை வரி உத்தரவைப் பிறப்பித்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ரஞ்சன் கோகோய் தன்னை விடுவித்துக்கொண்டதை (Recused) அடுத்து, வழக்கு வேறொரு அமர்வின் முன் அக்டோபர் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய மூவர் அமர்வு மீண்டும் இந்த வழக்கு விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது.

"இந்த வழக்கை, எங்களில் ஒருவரும் இல்லாத மற்றொரு அமர்வின் முன் விசாரணைக்கு அனுப்புங்கள்" என்று அவர்களின் உத்தரவில் சொல்லப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி ரவீந்திரபட், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். இந்த வழக்கில், மனுதாரர் கைதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மும்பை உயர் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட காலக்கெடு, அக்டோபர் 4-ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், வழக்கறிஞர் அபிஷேக் மனு, சிங்க்வி வழக்கை உடனடியாக விசாரிக்கக் கேட்டுக்கொண்டதன் பேரில், வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பீமா கோரேகான்-  கைது செய்யப்பட்ட ஐவர்
பீமா கோரேகான்- கைது செய்யப்பட்ட ஐவர்

நீதிபதிகள், தனக்கு எவ்வகையிலாவது தொடர்புடையதாக ஒரு வழக்கு இருப்பின், அந்த வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், ஒரு முக்கியமான வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டுள்ள ஐந்து நீதிபதிகளும், அதற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை. எனினும், நேரமின்மையால் நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த வழக்கை விசாரிக்கவில்லை எனவும், நீதிபதி ரவீந்திர பட், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்காக வழக்கறிஞராக வாதாடியிருப்பதால்தான் தன்னை விடுவித்துக்கொண்டார் எனவும் சில மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீதிபதி தீபக் குப்தா மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்கிறது. முடிவை தேசமே ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.