Published:Updated:

'செல்'லுக்கு அனுப்பிய செல்போன்: விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

விகடன் விமர்சனக்குழு
'செல்'லுக்கு அனுப்பிய செல்போன்: விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
'செல்'லுக்கு அனுப்பிய செல்போன்: விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
'செல்'லுக்கு அனுப்பிய செல்போன்: விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் நீதிமன்ற அறைக்குள் செல்போன் ஒலித்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கு, அடிதடி வழக்குகளில் சிக்கி சிறைக்கு செல்வதை கேள்விப்பட்டு இருப்போம். கோர்ட் வளாகத்தில் தங்கள் செல்போன் ஒலித்ததால் நீதிமன்றத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அருப்புக்கோட்டை அருகேயுள்ள மாங்குளத்தை சேர்ந்தவர்கள் முத்துவேல், கனிராஜ். கூலித்தொழிலாளர்களான இவர்கள் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தாக்கிய வழக்கின் விசாரணைக்காக நேற்று அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அப்போது அந்த நீதிமன்றத்தில் வேறொரு வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாஜிஸ்திரேட் சொர்ணக்குமார் வழக்கை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது கோர்ட்டின் வாசல் ஓரம் நின்றபடி முத்துவேலும், கனிராஜ் ஆகிய இருவரும் அந்த வழக்கு விசாரணையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். கோர்ட்டில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கோர்ட் டவாலிகள் பார்வையாளர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்ய அறிவுறுத்துவர்.

ஆனால் கிராமவாசிகளான இருவரும் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யவில்லை. இதனால் அவர்களது செல்போனுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. ரிங் டோன் ஒரு சினிமா பாடல் என்பதால், தொடர்ந்து அது நீதிமன்றப் பணிக்கு தொந்தரவாக இருந்தது.

கோர்ட்டில் அமைதியாக விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று செல்போனில் ஒலித்த ரிங்டோனால் மாஜிஸ்திரேட் சொர்ணக்குமார் எரிச்சலானார்.

உடனே உதவியாளரை அழைத்து அந்த இருவரது செல்போன்களை சுவிட் ஆப் செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி உதவியாளர் அந்த இருவரிடமும் செல்போனை ஆப் செய்து வைக்கும்படி எச்சரித்து விட்டு சென்றார். ஆனால் உதவியாளரின் எச்சரிக்கையை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. செல்போன்களை ஆப் செய்யாமல் தொடர்ந்து கோர்ட் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

'செல்'லுக்கு அனுப்பிய செல்போன்: விருதுநகர் நீதிமன்றத்தில் பரபரப்பு!

அப்போது திடீரென்று ஒருவரது செல்போனுக்கு அழைப்பு வர, செல்போன் சத்தத்துடன் ஒலித்தது. சுதாரித்தபடி இருவரும் தங்கள் செல்போனை அணைக்க முயல, மாஜிஸ்திரேட் சொர்ணக்குமார் கடுங் கோபத்துடன், நீதிமன்ற பணிக்கு இடையூறு  ஏற்படுத்திய அவர்கள் இருவரையும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி அருப்புக்கோட்டை காவல்துறையினர் முத்துவேல், கனிராஜ் இருவரையும் கைதுசெய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். இப்போது அருப்புக்கோட்டை சப்-ஜெயிலில் 'செல்' லுக்கு அனுப்பிய தங்கள் செல்போனை நினைத்து வருந்திக்கொண்டிருக்கின்றனர்.

- எம்.கார்த்தி