Published:Updated:

கேரள அரசின் புதிய கோரிக்கையை ஏற்றது ஐவர் குழு

கேரள அரசின் புதிய கோரிக்கையை ஏற்றது ஐவர் குழு
கேரள அரசின் புதிய கோரிக்கையை ஏற்றது ஐவர் குழு
கேரள அரசின் புதிய கோரிக்கையை ஏற்றது ஐவர் குழு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக, கேரள அரசு முன்வைத்த புதிய கோரிக்கை மனு ஒன்றை, நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் நிபுணர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை தொடர்பாக ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழு டெல்லியில் இன்று கூடியது.

அப்போது, இடுக்கியில் நில அதிர்வுகள் ஏற்பட்டது பற்றியும் நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஐவர் குழுவிடம் கேரள அரசு புதிய கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்தக் கோரிக்கையை, ஐவர் குழு ஏற்றுக்கொண்டது.

புதிய அணை தேவையற்றது என்று தமிழக அரசும், அணை உள்ள பகுதியில் 26 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால், நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசும் ஐவர் குழுவிடம் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் குறித்து இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் ஆழம், உறுதித்தன்மை குறித்த ஆய்வுகளை மத்திய நீர் ஆணைய நிபுணர்கள் ஓராண்டாக மேற்கொண்டு வருகிறார்கள். அணையின் முன், பின் பகுதிகளும், நீர்முழ்கி மூலம் அடித்தளத்திலும் ஆய்வு நடத்தப்பட்டன.

மத்திய நீர் ஆணையம் தனது ஆய்வு அறிக்கையை இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நீர் ஆணைய ஆய்வு குறித்த அறிக்கை நகலை வழங்கவேண்டும் என்று கேரள அரசின் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அது தவிர, ரூர்க்கி ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி. நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகளைக் குழுவினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேரள அரசு கோரிக்கை வைத்துள்ளது. அந்த இரு அறிக்கைகளையும் இக்குழு ஏற்கெனவே நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
 
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இந்த ஐவர் குழுவில், தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோரும், மத்திய நீர் வளத்துறை அமைச்சக முன்னாள் செயலாளர் சி.டி. தட்டே, மத்திய நீர் ஆணைய முன்னாள் தலைமைப் பொறியாளர் பி.கே.மேஹதா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.