Published:Updated:

`அந்த 9 லட்சத்தையும் மனநல காப்பகத்துக்குக் கொடுங்க!’- விவாகரத்து வழக்கில் நெகிழவைத்த தென்காசி பெண்

court
court

விவாகரத்து வழக்கில் கணவர் கொடுத்த ஜீவனாம்சத் தொகையை ஏற்க மறுத்து மனநல மருத்துவமனைக்குத் தானமாக வழங்கிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவருக்கும் ரஷ்யாவில் பணியாற்றி வந்த ஜீவானந்தம் என்பவருக்கும் இடையே 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெரியவர்கள் முன்னிலையில் நடந்த இந்தத் திருமணத்துக்குப் பின்னர் ரஷ்யா சென்ற ஜீவானந்தம் எப்போதாவது மட்டுமே மனைவியைப் பார்க்க வந்துள்ளார். 

madurai high court
madurai high court

இதனிடையே, ஜீவானந்தம் குடும்பத்தினர் வரதட்சணையைக் கேட்டு பெண் டாக்டருக்குத் தொந்தரவு கொடுத்ததால் வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. அதில், 2005-ம் ஆண்டு தீர்ப்பளித்த தென்காசி நீதிமன்றம் 7 பேருக்குத் தண்டனை வழங்கியது.

வரதட்சணை வழக்கில் விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜீவானந்தம் தரப்பினர் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நெல்லை அமர்வு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில், ஜீவானந்தத்துக்கு ஏற்கெனவே ரஷ்யாவில் திருமணம் நடைபெற்று குழந்தை இருக்கும் விவரம் பெண் டாக்டருக்குத் தெரியவந்திருக்கிறது. 

`ரூ.11 லட்சம், 75 சவரன்  வரதட்சணை; போதையில் உளறிய மாமா!' - திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

அதனால் மனம் உடைந்த அவருக்குச் சிறிது மனநல பாதிப்பு ஏற்பட்டு நெல்லையில் உள்ள மனநல மையத்தில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். பின்னர் கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அப்போது ஜீவானந்தம் தரப்பில் சமரசம் செய்துகொள்ள அனுமதி கோரியதால் நீதிபதி அனுமதியளித்தார்.

அதன்படி இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பெண் டாக்டர், ``நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள். பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாதபோதிலும் மருத்துவத் தொழில் செய்துவரும் எனக்கு அவர் தரும் பணம் எதுவும் தேவையில்லை. ஆனால், நெல்லையில் உள்ள மனநல மையத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மனநலச் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அதனால் அந்த மையத்துக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்'' என்றார். 

சினேகா மனநல மருத்துவமனை
சினேகா மனநல மருத்துவமனை

இறுதியில் ஒன்பது லட்சம் தருவதாக ஜீவானந்தம் தரப்பினர் ஒப்புக்கொண்டார்கள். ஆனால், அந்தப் பணத்தையும் பெண் டாக்டர் பெற்றுக்கொள்ள மறுத்ததுடன், மருத்துவமனைக்கே கொடுக்குமாறு நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். அதனால் ஒன்பது லட்சம் ரூபாய்க்கான வரைவோலை, மருத்துவமனை நிர்வாகத்திடம் நீதிமன்றம் சார்பாக ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சினேகா மனநல மையத்தின் டாக்டர்.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, ``மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், தனக்குக் கிடைத்த பணத்தை எங்கள் மருத்துவமனைக்குக் கொடுத்திருப்பதை எங்கள் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். 

டாக்டர்.பன்னீர்செல்வம்
டாக்டர்.பன்னீர்செல்வம்

இந்தப் பணத்தை எங்களுக்குக் கொடுக்கப்போவதாக வழக்கறிஞர் பேசியபோது நாங்கள் மறுத்தோம். ஆனாலும், பெண் மருத்துவரின் விருப்பத்தைச் சொல்லி வற்புறுத்தியதால் ஏற்றுக்கொண்டோம். எங்கள் மருத்துவமனையில் ஏற்கெனவே பலருக்கு இலவச சிகிச்சை அளித்துவருகிறோம். தற்போது இந்தப் பணம் கிடைத்திருப்பதால் இதை வைத்து மேலும் பலருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உதவியாக அமையும்’’ என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு