Published:Updated:

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமானி விவகாரம் - ஒரு டைம்லைன்!

நீதிபதி தஹில் ரமானி இடமாறுதல் விவகாரத்தில் என்ன நடந்தது... அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழுந்த குரல்கள் என்னென்ன?

Vijaya Kamlesh Tahilramani
Vijaya Kamlesh Tahilramani

16 ஜூலை 2018

2001-ம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜய கமலேஷ் தஹில் ரமானியை, தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் அடங்கிய கொலீஜியம் பரிந்துரை செய்தது.

04 ஆகஸ்ட் 2018

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜய கமலேஷ் தஹில் ரமானி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

12 ஆகஸ்ட் 2018

இந்தியாவில் மிகப்பழைமையான மிகப்பெரிதான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தஹில் ரமானி.

28 ஆகஸ்ட் 2019

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜய கமலேஷ் தஹில் ரமானியை , நீதித்துறையின் நிர்வாக நலன்களைக் கருதி, மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணிமாற்றம் செய்ய ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் பரிந்துரை செய்தது.

Vijaya Kamlesh Tahilramani
Vijaya Kamlesh Tahilramani

2 செப்டம்பர் 2019

கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு, நீதிபதி தஹில் ரமானி கோரிக்கை வைத்தார்.

3 செப்டம்பர் 2019

நீதிபதி தஹில் ரமானியின் கோரிக்கையை நிராகரித்து, அவரது பணிமாற்றத்துக்கான பரிந்துரையை கொலீஜியம் உறுதி செய்தது.

6 செப்டம்பர் 2019

இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பினார் நீதிபதி விஜயகமலேஷ் தஹில் ரமானி

21 செப்டம்பர் 2019

நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொதுவாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாற்றலாகும்போது, தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் நீதிமன்றத்தைவிட அளவில் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்வதோ, நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ நியமனம் செய்யப்படுவது நடக்கும்.

ஆனால் இந்தியாவில், அளவில் நான்காவது பெரிய நீதிமன்றமாக, 75 நீதிபதிகள் வரை அமர்வு இருக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவரை, மூன்றே மூன்று நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றியிருப்பதற்கான காரணமும் விளக்கப்படவில்லை.

வலுத்த எதிர்ப்புக் குரல்:

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்தப் பணியிட மாற்றம் குறித்த தகவல் வெளியானதும், தேசிய அளவில் இதற்கான எதிர்ப்புக்குரல்கள் வலுத்தன. இந்தப் பணியிட மாற்றம் அவர் குஜராத் கலவரம் தொடர்பான பில்கிஸ் பானோ வழக்கில் வழங்கிய அதிரடி தீர்ப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிக்கு விருப்பமான, சென்னையின் இரண்டு மூத்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க தஹில் ரமானி மறுத்துவிட்டதால், அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் பலவாறாக செய்திகள் பரவின.

இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் இந்த இடமாற்றத்துக்கு எதிர்ப்புக் குரல் பதிவு செய்தனர்.

Vijaya Kamlesh Tahilramani
Vijaya Kamlesh Tahilramani

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் இந்த இடமாற்றம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தாங்கள் எந்த நிலைப்பாடும் எடுக்கப் போவதில்லை எனவும், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர முடியுமா என்று விவாதிக்க வேண்டும் எனவும் கூறினர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக வேறு உச்ச நீதிமன்ற வழக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், அதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறினர். மேற்கொண்டு மனுதாரர் அவரது கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் அல்லது நாடாளுமன்றத்திடம்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு, நீதிபதி தஹில் ரமானிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர், இதைத் தொடர்ந்து நீதிபதி தஹில் ரமானி தன்னுடைய நண்பர்களிடம், `நான் இந்த அமைப்பின் அங்கம் கிடையாது. விரைவில் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதிக்கு எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன்” எனத் தெரிவித்ததாகவும் செய்தி வெளியானது. கொலீஜியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கோரப்பட்டது.

கொலீஜியத்தின் இந்த முடிவு குறித்த ஆதரவுக் குரல்:

ஒரு சாரார், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதே வேளையில், பலர் நீதித்துறையில், இத்தகைய மாற்றங்களைச் செய்யும் முழு உரிமை கொலீஜியத்துக்கு உண்டு என்று வாதாடினர். குஜராத் களவர் வழக்கு தீர்ப்புக்காகப் பழி வாங்க நினைத்தால், அவரை முதலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்திருக்கவே தேவையில்லை என்பது அவர்கள் தரப்பு வாதம். அவரை தலைமை நீதிபதியாக நியமித்த கொலீஜியத்திலும், தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அங்கம் வகித்ததை ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டினர்.

முன்னாள் நீதிபதி சந்துரு, ``எல்லா உயர் நீதிமன்றங்களும் சம அதிகாரம் படைத்தவை தான், இதனை எதிர்ப்பது முறையல்ல’’ என்று தன்னுடைய கருத்தைப் பதிவிட்டார்.

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ``தான் அறிந்தவரை, நீதிபதி தஹில் ரமானி, அவருடைய பணியை சரிவரச்செய்யவில்லை, வழக்குகளை மதியத்துக்கு மேல் விசாரிக்கவில்லை. விரைந்து தீர்ப்புகள் வழங்கவில்லை. தலைமை நீதிபதி பதவியில் இருந்துகொண்டு தவறான முன்னுதாரணமாக இருந்தார்’’ என்று சற்று கடுமையாகவே ஊடகங்களில் தன் கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

Madras High court
Madras High court

இவ்வாறு இரு வேறு மன நிலைகளில் எதிர்கொள்ளப்பட்ட இந்த விஷயத்தில், நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதால் தற்காலிக முடிவு எட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்திய தேசத்தில், ஓர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தான் இருக்கும் துறையை எதிர்த்து ராஜினாமா செய்வது என்பது நிச்சயம் தேச நலனுக்கு உகந்ததல்ல.

நீதித்துறையின் நலன் கருதி அவரது இடமாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை எனவும், அப்படி ஒருவேளை நிச்சயத் தேவை ஏற்பட்டால், அதன் காரணத்தை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் கொலீஜியத்தின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இது தனி நபர் நடவடிக்கைகளில் ஏற்பட்ட பிரச்னையா அல்லது இந்திய ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்கும் காரணியா என்பதற்கான பதில் காலத்தின் கையில்தான் இருக்கிறது.

இனி அவருக்குப் பதில் இவர்! - சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?