Published:Updated:

"இணையம் அடிப்படைஉரிமை: கைப்பேசி பயன்படுத்தியவரை நீக்கியது தவறு!”-கேரளாவிலிருந்து அதிரடித் தீர்ப்பு!

கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்ற கல்லூரியின் விதிமுறையை எதிர்த்து மாணவி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு.

Kerala High Court
Kerala High Court

கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லூரி, அதனுடைய பெண்கள் தங்கும் விடுதியில் மாணவிகள் கைப்பேசி பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்து அதே கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஃபாத்திமா ஷிரின் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளார்.

கைப்பேசியைப் பயன்படுத்த விடுதி நிர்வாகம் விதித்திருந்த கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க ஷிரின் மறுத்திருக்கிறார். மேலும் ஆண்கள் விடுதிகளுக்கு இல்லாத கூடுதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் எனவும் நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். விடுதி நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படவில்லை என்பதற்காக விடுதியிலிருந்து ஷிரின் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Sree Narayana Guru College Of Arts & Science
Sree Narayana Guru College Of Arts & Science

விடுதி நிர்வாகம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் மற்றும் தன்னுடைய இடைநீக்கத்தை எதிர்த்து ஷிரின் தொடுத்திருந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதில் மாணவி ஷிரின் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்றும் அவரை மீண்டும் உடனடியாக விடுதியில் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ”இணையத்தைப் பயன்படுத்துவது என்பது அடிப்படை உரிமை” என்றும் அதற்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் இணையப் பயன்பாட்டிற்கு அவ்வப்போது தடைவிதித்து வருகிற சூழலில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமை இல்லை என்று கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும், விடுதிகளில் ஒழுக்கத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் மற்றும் வார்டன் ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதை அனைவரும் கடைப்பிடித்தாக வேண்டியது கட்டாயம் எனப் பல நீதிமன்றத் தீர்ப்புகளை முன்னிறுத்தி வாதாடினர். மாணவி ஷிரின் தங்கியிருந்த விடுதியில் உள்ள மற்ற அனைத்து மாணவிகளும் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொள்ள உத்திரவாதம் அளித்திருப்பதாகவும் ஷிரின் மட்டும்தான் கடைப்பிடிக்கவில்லை என்பதனால் அவர் விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கத்தை நியாயப்படுத்தி வாதிட்டது.

கல்லூரி நிர்வாகம் மேலும் முன்வைத்த வாதங்கள்: “மாணவிகள் விடுதியில் மடிக்கணினி பயன்படுத்த தடையில்லை என்றும், கைப்பேசி பயன்படுத்த மட்டுமே தடை இருப்பதாகவும் தெரிவித்தது. மாணவிகள் நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விடுதியில் அனுமதிக்கும்போதே இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டுதான் சேர்ந்துள்ளனர், தற்போதும் அதற்குக் கட்டுப்பட மாட்டேன் என இவர்கள் கோர முடியாது.”

Faheema Shirin
Faheema Shirin

நிர்வாகத் தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஆஷா தன்னுடைய தீர்ப்பில், “முதல்வர் மற்றும் வார்டன்தான் கல்லூரி மற்றும் விடுதிகளுக்குப் பொறுப்பானவர்கள். அவர்கள் கொண்டு வருகிற விதிகளுக்கு மாணவிகள் கட்டுப்பட்டாக வேண்டும் என்றாலும், அத்தகைய கட்டுப்பாடுகள் நியாயமானதாக உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். கைப்பேசி பயன்படுத்துவதனால் மற்ற மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் வராதவரையில் பிரச்னையில்லை. மனுதாரரால் சக விடுதி மாணவிகளுக்கு அப்படி ஏதாவது பாதிப்பு உண்டாகியுள்ளது என நிர்வாகம் நிரூபிக்கத் தவறியுள்ளது.

மேலும் இன்று இணையம் அடைந்துள்ள அசுர வளர்ச்சியில் ஒரு வழியில்தான் கல்வி கற்க வேண்டும் என மாணவர்களை நிர்பந்திக்க முடியாது. வயதுவந்த மாணவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான வழிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டு. ஐ.நா அமைப்பு 2014-ம் ஆண்டு இணையத்தைப் பயன்படுத்துவது என்பதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைய உரிமை தொடர்பான பிரிவு இல்லையென்றாலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகளை (அதற்கு ஏதுவான சட்டம் இந்தியாவில் இல்லையென்றாலும்) கவனத்தில் கொண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது அவருடைய தனிநபர் உரிமைக்கு எதிரானது என்றும் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை, கல்வி உரிமையின் ஓர் அங்கம் என்றும் இந்த நீதிமன்றம் அங்கீகரிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. ஷிரினைத் தவிர மற்ற அனைத்து மாணவிகளும் ஒப்புக்கொண்டார்கள் என்பதற்காக மட்டுமே மாணவி ஷிரினை இடைநீக்கம் செய்தது செல்லாது; உடனடியாக அவரை விடுதியில் மீண்டும் அனுமதிக்க வேண்டும் எனக் கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Justice P.V. Asha
Justice P.V. Asha

கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல வழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சட்டவல்லுநர்களால் வரவேற்கப்படுகிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் கொண்ட இதர கல்வி நிலையங்களிலும் இந்தத் தீர்ப்பு தாக்கம் செலுத்தும் என்றும் நம்பப்படுகிறது.