Published:Updated:

`ஏழை நோயாளிகளுக்கு ரூ.50,000; மதுரையில் இருக்கணும்'- சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்!

``உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளைக் கொன்றுள்ளீர்கள்” என்று கடுமையாகக் கண்டித்தனர் நீதிபதிகள்.

ஜெயகோபால்
ஜெயகோபால்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், இன்ஜினீயர் சுபஸ்ரீ பைக்கில் சென்றார். அப்போது, சாலையின் தடுப்புச் சுவரில் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழாவின் பேனர், சுபஸ்ரீ பைக்கின் மீது விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர், கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சுபஸ்ரீ சிக்கினார். உயிருக்குப்போராடிய அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

அங்கு அவர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் மேகநாதன், பேனரை வைத்த அ.தி.மு.க பிரமுகர் பள்ளிக்கரணை ஜெயகோபால் ஆகியோர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, ஜெயகோபால் தலைமறைவானர். தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த காவல்துறை ஜெயகோபாலைக் கைது செய்தது.

`நாங்கள் உத்தரவிடவில்லை...!'- ஜின்பிங் நிகழ்ச்சி பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

இந்நிலையில் கடந்த மாதமே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஜெயகோபால். மனுவில், ``என் மகனின் திருமணத்துக்காக வாழ்த்து கூறிதான் பேனர் வைத்தேன். வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது, ``உங்கள் மருமகளை வரவேற்க இன்னொரு மகளைக் கொன்றுள்ளீர்கள்” என்று கடுமையாகக் கண்டித்தனர் நீதிபதிகள்.

விபத்து
விபத்து

இதன் பிறகு அவரது ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுவந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடந்த விசாரணையில், ``45 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறோம். எந்த நிபந்தனை விதித்தாலும் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்" என்று ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது இடைமறித்த நீதிபதி, ``இரு நீதிபதிகள் அமர்வில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டதே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா" என அரசிடம் கேள்வி எழுப்பினார்.

கனவு நனவானது.. கனடா செல்லும் தேர்வில் தேர்ச்சி.. சுபஸ்ரீ குடும்பத்தை துரத்தும் சோகம்!

அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு, ``குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருக்கிறது" என விளக்கம் கொடுத்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயகோபால் மற்றும் மேகநாதன் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ``ஏழை நோயாளிகளின் சிகிச்சை பெறும் வகையில் அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.50,000 வழங்க வேண்டும் என்று ஜெயகோபாலுக்கு உத்தரவிட்டார் நீதிபதி கார்த்திகேயன்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதேபோல் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்திலலிருந்து மறு உத்தரவு வரும்வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார். அதேபோல் மேகநாதன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

"நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது!" - பேனர் விவகாரம் குறித்து சுபஸ்ரீ பெற்றோர் குமுறல்