அரசியல்
அலசல்
Published:Updated:

சீரழித்தவனையே கை பிடிப்பதா? - ‘கலாசார வகுப்பு’ எடுக்கிறதா நீதித்துறை?

 நீதித்துறை
பிரீமியம் ஸ்டோரி
News
நீதித்துறை

பிற்போக்கு கருத்துகளின் அடிப்படையில் பழைய காலத்துக்கு இழுத்துச் செல்வதுபோல சில நேரங்களில் நீதிபதிகள் செயல்படுகிறார்கள்.

‘எந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தாயோ, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்’ என்ற நிபந்தனையுடன், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை. ஒன்றல்ல, இரண்டல்ல இதேபோல் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, “ ‘பழைய’ மரத்தடிப் பஞ்சாயத்துகளையும், ‘புதியபாதை’ போன்ற திரைப்படங்களையும் நினைவூட்டுவதாக இருக்கிறது உயர் நீதிமன்றத்தின் இந்தச் செயல்” என்று கொதிக்கிறார்கள் பெண்ணியவாதிகள்.

சீரழித்தவனையே கை பிடிப்பதா? - ‘கலாசார வகுப்பு’ எடுக்கிறதா நீதித்துறை?

‘பாலியல் வன்கொடுமைக் குற்றங்களின் தலைநகர்’ என்று விமர்சிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநிலம், கேரியில் 17 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து, அந்தப் பாலியல் குற்றவாளி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கருவுற்று, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதனால், குற்றவாளி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில், ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ்குமார் சிங், “குற்றம்சாட்டப் பட்டவரின் குழந்தையை பாதிக்கப்பட்ட பெண் பெற்றெடுத்திருக்கிறார். மேலும், அவருக்கு ஜாமீன் வழங்குவதை பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் தந்தையும் எதிர்க்கவில்லை. எனவே, ஜாமீனில் வெளிவந்த பிறகு, 15 நாள்களுக்குள் அந்தப் பெண்ணையே குற்றவாளி திருமணம் செய்துகொள்ள வேண்டும். மனைவி, மகள் என்ற முறையில் அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதேபோல, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், அமேதி காவல் நிலையத்தில் 19 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவானது. பாலியல் வன்கொடுமை செய்தல், விஷம் கொடுத்தல், மிரட்டுதல், தடுத்து வைத்தல் ஆகிய குற்றப் பிரிவுகளில் அந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. மேலும், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், ‘எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார்’ என்று கூறி, அந்தப் பாலியல் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. “பாதிக்கப்பட்ட பெண், குழந்தை பெற்றிருக்கிறார். ஜாமீனில் வெளிவந்த பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீரழித்தவனையே கை பிடிப்பதா? - ‘கலாசார வகுப்பு’ எடுக்கிறதா நீதித்துறை?

தொடர்ந்து போக்சோ சட்டம், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, விஷம் கொடுத்தல், மிரட்டுதல், கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்ட மற்றொரு குற்றவாளிக்கும், ‘பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஐந்து பேருக்கு இதே நிபந்தனையுடன் இதே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையும், மும்பை உயர் நீதிமன்றமும் இதேபோல ‘பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியிருக்கின்றன.

இது குறித்துப் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி, “இப்படிச் செய்வதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்று மறுக்கிறார். “சட்டத்தின் விளக்கத்தைச் சொல்வது, இந்தக் குற்றம் இந்தச் சட்டத்தின் கீழ் வருகிறதா என்பதைப் பார்த்து உரிய தண்டனை வழங்குவது என்பதுதான் நீதிமன்ற விசாரணை முறை. மாறாக, தங்களுடைய சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து நீதிபதிகள் உத்தரவோ, தீர்ப்போ வழங்குவது தவறு. அப்படித் திருமணம் செய்துகொள்பவர்கள், பிறகு அந்தப் பெண்ணைக் கைவிட்டால் என்ன தண்டனை... ஒரு ‘மைனர்’ பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவுகொள்வது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்குவது தவறான முன்னுதாரணம்” என்றார் அருள்மொழி.

அருள்மொழி
அருள்மொழி

பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா, “பிற்போக்கு கருத்துகளின் அடிப்படையில் பழைய காலத்துக்கு இழுத்துச் செல்வதுபோல சில நேரங்களில் நீதிபதிகள் செயல்படுகிறார்கள். ‘உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறோம்’ என்று நம் குடும்பங்களில் தாத்தா, பாட்டி அறிவுரை சொல்வதைப்போல, சில நீதிபதிகள் பேசுகிறார்கள். காதல் திருமணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்லும்போது, ‘அப்பா, அம்மாவை மீறி இப்படிச் செய்யலாமா?’ என்று நீதிபதிகள் கேட்பதைப் பார்க்கிறோம். 18 வயதைக் கடந்தவர்கள் என்றால், திருமணம் தொடர்பாக முடிவெடுக்க அவர்களுக்குச் சட்டப்படி உரிமை இருக்கிறது என்பதைத்தானே நீதிபதிகள் சொல்ல வேண்டும்... மாறாக, ‘கலாசார வகுப்பு’ எடுப்பது எப்படிச் சரியாக இருக்கும்... யாரைச் சீரழித்தாயோ அவளையே திருமணம் செய்துகொள் என்று உத்தரவிடுவதும் அப்படித்தான் இருக்கிறது” என்று விமர்சிக்கிறார்.

“ஒருபுறம், `மனைவியின் சம்மதமின்றி உறவுகொள்வது தண்டனைக்குரிய குற்றம்’ என்று சொல்லும் நீதிமன்றம், இன்னொருபுறம் பாலியல் வன்கொடுமை செய்தவனைத் திருமணம் செய்துகொள் என உத்தரவிடுவது விசித்திரம்” என்கிறார்கள் பெண்ணிய ஆதரவாளர்கள்.

ஓவியா
ஓவியா

உச்ச நீதிமன்றமே...

இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளே இத்தகைய கருத்துகளைத் தெரிவித்ததாகச் சர்ச்சை எழுந்தது. ‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தனக்குக் குற்றமிழைத்த அந்த நபரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவரது விருப் பத்துக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும்’ என்று 2010-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒரு வழக்கில் குறிப்பிட்டார். 2021-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இருந்தபோது, ‘நீ பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்று ஒரு பாலியல் குற்ற வாளியிடம் கேட்டார் என்று சர்ச்சை எழுந்தது. ஆனால், தான் அப்படிக் கேட்கவில்லை என்று பாப்டே மறுத்தார்.