உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 23 வயது பெண்ணின் அம்மா அஞ்சு தேவி, தன் மகளை 22 வயதுப் பெண் பிடித்து வைத்திருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து ஒப்படைக்கவேண்டும் என்று கோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 6-ம் தேதி இரு பெண்களும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
இளம் பெண்கள் இருவரும், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தனர். மேலும், 'இந்து திருமணச்சட்டம் இரண்டு பேரின் திருமணத்தை பற்றி பேசுகிறது. இந்தியச் சட்டம் தன்பாலின திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனவே எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'இந்து கலாசாரத்தில் திருமணம் என்பது குடும்பத்தைக் குறிப்பது. ஓர் ஆணும், ஒரு பெண்ணும்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இந்திய கலாசாரம், மதங்கள் மற்றும் சட்டத்தின் படி இந்தியா செயல்படுகிறது. மற்ற நாடுகளில் திருமணம் ஒரு ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் திருமணம் புனிதமானது. தன்பாலின திருமணம் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. இந்தியாவில் செல்லுபடியாகாது' என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இரு பெண்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்தியாவில் தற்போது ஆங்காங்கே தன்பாலின திருமணங்கள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட நாக்பூரில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் கோவாவில் திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இப்படியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம்.