Published:Updated:

பிரசாந்த் பூஷன் வழக்கில் நடப்பது என்ன?!

கார்த்தி
Supreme Court Of India
Supreme Court Of India

ஒரு தேசத்தின் ஒவ்வொரு தூணும் புரை படிந்துகொண்டிருக்கும் சூழலில், நீதிமன்றங்கள் அதன் நாடியான வழக்கறிஞர்களின் குரல்வளையை நசுக்கி ஊமையாக்குவது இந்த தேசத்துக்கு நல்லதல்ல.

ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் சாமான்யனின் கடைசி நம்பிக்கை என்பது நீதிமன்றம்தான். 'பிரச்னையை கோர்ட்டில் பேசிக்கொள்வோம்' என நாம் உச்சரிக்கும் மந்திரத்துக்கு இன்னும் சக்தி இருக்கிறது என நம்பும் மனிதர்கள் வாழ்ந்த, வாழும் தேசம் இது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நீதிகளில் நம்மில் சிலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், இது தேசத்துக்கான நீதி. இந்த நீதி மட்டும்தான் இன்னும் சிறுபான்மையினர்களை, ஒடுக்கப்பட்டவர்களை இந்த தேசத்தில் நம்பிக்கையோடு வாழ வழிசெய்கிறது.

தாமாக முன்வந்து நீதிமன்றங்கள் எத்தனையோ வழக்குகளை விசாரித்து இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு, பழைய வழக்குகளை தூசி தட்டுதல், செய்தியின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்காக பேசுதல் போன்ற விஷயங்களுக்காக இந்த Suo Moto-வை நீதிமன்றங்கள் பயன்படுத்தலாம். ஆபாச வீடியோக்களை ஃபேஸ்புக், கூகுள் , யாஹூ, வாட்ஸ்அப் போன்றவை அனுமதிக்கக்கூடாதென உச்சநீதிமன்றம் தொடுத்த suo moto சமீபத்திய உதாரணம்.

இந்தியா தன் 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முந்தைய தினம், உச்சநீதிமன்றம் இதேபோன்றதொரு suo moto வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கிறது. வரும் 20-ம் தேதி அதற்கான தண்டனையை அறிவிக்கப்போவதாக பிரகடனம் செய்திருக்கிறது. அந்தக் குற்றம் பற்றியும், அது எப்படி குற்றமாகும் என்பது பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் தலையங்கம் வெளியாகியிருந்தது. அது இங்கே சுருக்கமாக.

பிரசாந்த் பூஷன்
பிரசாந்த் பூஷன்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட், முகக்கவசம் அணியாமல் அமர்ந்திருந்தது குறித்து விமர்சித்து ட்வீட் செய்ததற்காகவும் உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்த தொடர் விமர்சனங்களுக்காகவும் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவுசெய்துள்ளது. மேலும் ‘அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகும் அந்தப் பதிவுகளை ஏன் நீக்கவில்லை’ என்று ட்விட்டர் இந்தியா நிர்வாகத்தையும் கண்டித்திருக்கிறார்கள் நீதிபதிகள். மேலும், 2009-ம் ஆண்டு ‘தெஹல்கா’ இதழுக்கு பிரசாந்த் பூஷன் அளித்த பேட்டியில் நீதித்துறையை விமர்சித்திருக்கிறார் என்று பத்தாண்டுகளுக்குப் முந்தைய வழக்கையும் தூசுதட்டி எடுத்திருக்கிறார்கள்.

அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருபவர் பிரசாந்த் பூஷண். கொரோனா பேரிடர்காலத்தில் அரசுகளால் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் சரிவரக் கையாளவில்லை என்றும், மிகவும் உடல்நலிவுற்று சிறையில் தவிக்கும் கவிஞர் வரவரராவ் உள்ளிட்ட விசாரணைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்காததைக் கண்டுகொள்ளவில்லை என்றும் பிரசாந்த் பூஷன் சமூக ஊடகங்களில் பதிவு செய்திருக்கிறார். இந்த விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம் எதிர்கொள்வது, கருத்துச்சுதந்திரத்துக்கு விடப்படும் சவால்.

பிரசாந்த் பூஷன்
பிரசாந்த் பூஷன்

நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் இடையூறு செய்வது, தீர்ப்பு குறித்து உள்நோக்கம் கற்பிப்பது, உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுப்பது போன்றவை சட்டப்படி குற்றங்கள். நீதித்துறை எந்தவிதச் சார்பும் தலையீடும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலமைப்புச் சட்டம் இத்தகைய அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. ஆனால், விமர்சனங்களை நசுக்குவதற்கும் விமர்சிப்பவர்களின் வாய்களை மூடுவதற்கும் இந்த அதிகாரங்களை நீதித்துறை பயன்படுத்துவது சரியல்ல.

மேலும், இந்தச் சமூக ஊடக யுகத்தில் பொதுவெளியில் இயங்கும் யாரும், எந்தக் கட்டமைப்பும் விமர்சனங்களிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, கருத்துச்சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க நீதித்துறை முன்வர வேண்டும். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்பது நீதிமன்ற மாண்பைக் காக்கும் கேடயமாகப் பயன்பட வேண்டுமேயன்றி ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வாளாக அல்ல.

தனிப்பட்ட நீதிபதி ஒருவரின் மாண்பைக் குலைத்தார் என்பதற்காக இந்தத் தண்டனை அல்ல, நீதியின் மேன்மையை பாதுகாக்கவே இந்த தண்டனை தரப்பட இருப்பதாக அதன் 108 பக்க அறிக்கையில் சாட்டையை சுழற்றியிருக்கிறது உச்சநீதிமன்றம். 74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒரு தேசம் இன்னும் நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Courts Act 1971) என்னும் சட்டத்தை வைத்திருக்க வேண்டுமா எனும் குரல்களே ஒலிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், இப்படியானதொரு தீர்ப்பு நீதிமன்றங்களில் இருக்கும் நீதி அரசர்களின் ஆதிக்க அதிகார மனப்பான்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் சூழலிலேயே, பிரசாந்த் பூஷன், என்.ராம், அருண் ஷௌரி ஆகியோர் இந்த அவமதிப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள். சாமான்யனின் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இது இருக்கிறது என்பதே வழக்கின் சாராம்சம். உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

Prashant Bhushan
Prashant Bhushan
Twitter
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் சாதாரண உடையில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்தை ஹெல்மெட் இல்லாமல் ஓட்டியதை விமர்சனம் செய்தார் என்பதுதான் பிரசாந்த் பூஷன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதுவும் பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் வாகனம் அது.

அது அந்த நீதிபதியின் தனிப்பட்ட விருப்பம் என தெளிவுபடுத்துகிறது நீதிமன்றம். அது நீதிபதியின் தனிப்பட்ட விருப்பம் என்றால், நீதிமன்ற மாண்பை சீர்குலைத்ததாக சொல்லப்படுவது ஏன் என்னும் கேள்வி suo moto-வாகவே நம்முள் எழுகிறது. வேறு நீதிமன்றங்கள் எனில், உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். சர்வ வல்லமை பொருந்திய உச்சநீதிமன்றமே இப்படியானதொரு நிலைப்பாட்டினை எடுக்கும் போது, நீதி தேவதையைப் போல நடப்பவற்றை அமைதியாக வேடிக்கைதான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது நர்மதா பச்சாவ் அண்டாலன் வழக்குதான். நீதிமன்றத்தின் வாயிலில் கோஷங்கள் எழுப்பியதற்காக அருந்ததி ராய், பிரசாந்த் பூஷன், மேதா பட்கர் மீது அவமதிப்பு வழக்கு 2001-ம் ஆண்டு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு அவமதிப்பு 2002-ம் ஆண்டு ஜஸ்டிஸ் பட்நாயக், சேதி அமர்வு அருந்ததி ராய்க்கு 2000 ரூபாய் அபராதமும், ஒரு நாள் சிறைத்தண்டனையும் விதித்தது. அந்த தண்டனையை அருந்ததி ராய் திஹார் சிறையில் கழித்தார். தற்போது கோடாரி பிரசாந்த் பூஷனின் தலையில் தொங்குகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதிலிருக்கும் மற்றொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. சாமான்ய மனிதர் ஒருவரை இப்படியான தண்டனைகள் மூலம் அமைதிப்படுத்த முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்களை யாரேனும் கேள்வி கேட்டால், ஓடிச் சென்று இப்படியான வழக்குகளில் சிக்க வைப்பார்கள். அதுவும் விவாதம் நடைபெற்று பிரபலங்கள் மூக்குடையும் தறுவாயில் இப்படியான வைபவங்கள் நடந்ததுண்டு. காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை இப்படியான அவமதிப்பு வழக்குகளை டஜன் கணக்கில் போட்டிருக்கிறார்கள். பிரபலங்களின் பண பலத்தில் மறைந்த ராம் ஜெத் மலானியைக்கூட அவர்கள் சார்பாக பேச வைக்க முடியும். சாமான்யன் ஒடிந்துபோவான். வாழ்க்கை முற்றிலுமாய் அழிந்துபோகும். வீட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் நடந்து ஓய்ந்துபோவான். இனி எப்போதும் அவன் வாய், கருத்து சொல்லத் துணியாது.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த போது, "நீதிபதி வண்டி ஓட்டினார் என நினைத்து ஹெல்மெட் பற்றி கருத்து தெரிவித்துவிட்டேன். ஆனால், அது நின்றுகொண்டிருந்த வாகனம் என பின்னர்தான் தெரிந்தது. ஆதலால், என் ட்வீட்டின் அந்தப் பகுதிக்கு மட்டுமானால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி நான் பேசியது கருத்து சுதந்திரத்தின் கீழ்தான் வரும்" என்கிறார் பூஷன். உண்மையில் அன்று அதை சமூக வலைதளங்களில் இருக்கும் பலர் விமர்சித்திருந்தனர். ஆனால், இதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது ஒரு வக்கீலின் மீது.

`பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்?

அதுவும் 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஆளும் அரசுகளுக்கு எதிராக பேசும் ஒரு நபரின் மீது இந்த சாட்டை சுழற்றப்பட்டிருக்கிறது. எமர்ஜென்சி காலத்தின் ஆணி வேராக இருந்த watershed வழக்கு ஒரு உயர்நீதிமன்றத்தில்தான் தொடுக்கப்பட்டது. ஓர் அரசு தனக்கிருக்கும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து தேர்தலையும் நிறுத்த முடியும் என்பதை நமக்கு கண் முன் காட்டினார் இந்திரா காந்தி. 'The Case That Shook India' என இதுகுறித்து புத்தகம் வெளியிட்டார் பிரசாந்த் பூஷன். 2018-ம் ஆண்டு பாஜக ஆட்சி செய்யும் காலத்தில்தான் காங்கிரஸுக்கு எதிரான இந்த புத்தகத்தை வெளியிட்டார் பிரசாந்த் பூஷன்.

2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட போது அவமானகரமானது என கருத்து தெரிவித்தார் பூஷன். அதிகார பலமிக்க நபர்கள் இந்த தேசத்தின் நீதித்துறையின் கீழ் வர மாட்டார்களா என கேள்வி எழுப்பினார். 2ஜி அலைக்கற்றையில் குற்றம் சுமத்தப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனம், ரஃபேல் ஒப்பந்தத்தில் 58 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என்றார். 2018-ம் ஆண்டு அதிகம் விமர்சிக்கப்பட்ட ரஃபேல் ஊழலைப் பற்றி தொடர்ச்சியாக பேசியவர் பூஷன். இப்படியாக பிரசாந்த் பூஷன் எல்லா கட்சிகளையும் தன் வாழ்நாளில் எதிர்த்திருக்கிறார். காங்கிரஸ் இரவில் செய்துகொண்டிருந்த தகிடுதத்தம்களை, பாஜக வெட்ட வெளியில் பகலில் செய்கிறது என்பார் அருந்ததி ராய். பிரசாந்த் பூஷன் மீதான இந்த வழக்குக்கு இரு பெரும் தேசிய கட்சிகளின் அமைதியே, கருத்து சுதந்திரத்தின் மீதான அவர்களின் நிலைப்பாட்டை நமக்குக் காட்டுகிறது.

லாக்டெளன் காலத்தில் மட்டும் புதிதாக 12,000 வழக்குகளை நீதிமன்றம் விசாரித்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. ஆனாலும், ஓராண்டு காலமாக இணைய வசதி மறுக்கப்படும் காஷ்மீருக்கோ, பிப்ரவரி மாதம் பற்றி எரிந்த டெல்லிக்கோ, உச்சநீதிமன்றம் suo moto ஆணை பிறப்பிக்கவில்லை. தலித்துகள் மீது தினந்தோறும் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஆனால், தங்களில் ஒருவரான போப்டேவை சமூக வலைதளங்களில் விமர்சித்ததுக்கு suo moto பிறப்பித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அத்தனை விளக்கங்களைக் கடந்து இந்த நீதிமன்றங்கள் யாருக்கானவை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால், அதுகுறித்து எந்தக் கருத்தும் சொல்ல விரல்கள் அச்சப்படுகின்றன. நீதித்துறையின் மீது சாமான்ய மனிதனுக்கு மதிப்பு தாமாக எழ வேண்டும். அத்தகைய மதிப்பு அதுதரும் சமரசமற்ற நீதிகளில் நிலைகொண்டிருக்கிறது. மேஜையின் மீது ஏறி நிற்க வைக்கும் லாகவத்தை நீதிமன்றங்களும் மரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள எடுப்பது அபாயகரமானது.

Verdict
Verdict
Satish Acharya

பிரசாந்த் பூஷனின் ட்விட்டுகளை நாம் ஆதரிக்கிறோமா அல்லது எதிர்க்கிறோமா என்பதல்ல இங்கு பிரச்னை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் அதைவிட அச்சம் கொள்ள வைக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் மீது ஒரு பொதுக்கருத்து சொல்வதைக்கூட இது தடை செய்யும். இது இந்த ஜனநாயகத்தை மேலும் சிதைத்திருக்கிறது என தீர்ப்பு வெளியான நாளில், தன் அதிருப்தியை பதிவு செய்திருந்தார் சீத்தாராம் எச்சூரி.

கருத்து சுதந்திரத்தின் எதிர்காலம் சூன்யமாகியிருப்பதாக உணர்கிறேன் என The Quint தளத்துக்கு பேட்டியளித்திருந்தார் வழக்கறிஞர் இந்திரா ஜைசிங்.

Vikatan

நேற்றைவிட இன்று நாம் ஜனநாயகத்தில் ஒரு படி கீழ் இறங்கியிருக்கிறோம். அதற்கும் முந்தைய நாளை விட நேற்று, ஒரு படி கீழ் இறங்கியிருந்தோம். இவையனைத்தும் நம் கண் முன்னர் நடந்துகொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியான நாளில் 'Early Indians' புத்தக ஆசிரியர் டோனி ஜோசப் இவ்வாறாக குறிப்பிட்டிருந்தார்.

"பிரசாந்த் பூஷனுக்கோ, 94 வயதான அவரின் தந்தை ஷாந்தி பூஷனுக்கோ இந்த வழக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், ஒரு தேசத்தின் ஒவ்வொரு தூணும் புரை படிந்துகொண்டிருக்கும் சூழலில், நீதிமன்றங்கள் அதன் நாடியான வழக்கறிஞர்களின் குரல்வளையை நசுக்கி ஊமையாக்குவது இந்த தேசத்துக்கு நல்லதல்ல."

அடுத்த கட்டுரைக்கு