Published:Updated:

ஆந்திரா: இழப்பீடு விவகாரத்தில் மெத்தனம்! - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்

அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்!
அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்!

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டியது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனையுடன்கூடிய அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த தல்லபக சாவித்ரம்மா என்ற பெண்ணுக்குச் சொந்தமான நிலத்தை, 2017-ல் ஆந்திர அரசு 'மன நலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மையம்' அமைப்பதற்காகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்திவிட்டு, அரசு அதிகாரிகள் தன்னை வெளியேற்றியது தொடர்பாக சாவித்ரம்மா ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், `கான்பூர் பகுதியிலுள்ள தனது நிலத்தை அடாவடியாக அதிகாரிகள் கையகப்படுத்திவிட்டதால், தங்குவதற்குக்கூட இடமில்லாமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும், வாழ்வாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு அரசுத் தரப்பில் மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சாவித்ரம்மாவின் மனுவைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், அவருக்கு அரசுத் தரப்பில் மூன்று மாதங்களில் உடனடியாக மாற்று இடம் ஏற்பாடு செய்த தர வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அவருக்கு உரிய அபராதமும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

ஆந்திரா: இழப்பீடு விவகாரத்தில் மெத்தனம்! - ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் அதிரடிகாட்டிய உயர் நீதிமன்றம்

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் சாவித்ரம்மாவுக்கு மாற்று இடமும் இழப்பீடும் வழங்காமல் மெத்தனமாக இருந்துவந்தனர். அதையடுத்து, சாவித்ரம்மா 2018-ல் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இழப்பீட்டுத் தொகையை வழங்காமலும், மாற்று இடம் ஏற்பாடு செய்து தராமலும் அலட்சியம் காட்டிவந்த வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர். இருப்பினும், நீதிமன்றத்தின் இரண்டாவது எச்சரிக்கையையும் கண்டும் காணாததுபோல் இருந்துவந்த அரசு அதிகாரிகள் மாற்று இடம் ஏற்பாடு செய்துவிட்டு, 2017-ல் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மூன்று வருடங்கள் கழித்துக் கடந்த மார்ச் மாதம்தான் வழங்கியிருக்கின்றனர்.

இழப்பீட்டு தொகை கிடைத்துவிட்டபோதிலும், அதிகாரிகளின் அலட்சியப்போக்குக்கு எதிரான தனது சட்டப் போராட்டத்தை அத்துடன் முடித்துக்கொள்ள விரும்பாத சாவித்ரம்மா அண்மையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வயதான பெண்மணியின் நிலத்தைக் கையகப்படுத்திவிட்டு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு இழுத்தடித்து இழப்பீடு வழங்கிய குற்றத்துக்காகவும், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் மெத்தனம் காட்டியதற்காகவும் 2017 முதல் 2021 மார்ச் மாதம் வரை நெல்லூர் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பிலிருந்த ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கடுமையாகச் சாடியது. தொடர்ந்து, மாவட்ட முன்னாள் வருவாய் முதன்மைச் செயலாளர் மன்மோகன் சிங், முன்னாள் மாவட்ட நிதித்துறை முதன்மை செயலாளர் எஸ்.எஸ்.ராவத் ஆகியோருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதித்தது.

கைது
கைது
representational image

அதேபோல், தற்போதைய நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சக்கரதர் பாபு, முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் ரேவு முத்யால ராஜு, சேஷகிரி பாபு ஆகியோருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிமன்ற வழக்கு செலவு முழுவதையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. இந்த வழக்கில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு