Published:Updated:

`பணியில் திருப்தி இல்லையென்றால் பெண் ஊழியரை இப்படியா தாக்குவது?’ - கொதித்த நீதிமன்ற ஊழியர்கள்

தூத்துக்குடி நீதிமன்றத்தில் பணிபுரியும் தட்டச்சு பெண் ஊழியரை நீதித்துறையைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி நீதிமன்றம்
தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிபவர் நாகர்கோவிலைச் சேர்ந்த சாரதி என்ற பெண் ஊழியர். இவர் தமிழில் டைப் செய்த தாளை எடுத்துக்கொண்டு நீதித்துறையில் பணியாற்றும் முக்கிய நபர் ஒருவரிடம் அளித்துள்ளார். அப்போது அதில் பிழைகள் இருந்ததாகவும் இது தொடர்பாக ஊழியர் சாரதிக்கும் சம்பந்தப்பட்டவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

காயமடைந்த டைப்பிஸ்ட் சாரதி
காயமடைந்த டைப்பிஸ்ட் சாரதி

வாக்குவாதம் முற்ற, கோபத்தில் பேப்பர் பேடினை தூக்கி எறிந்துள்ளார் நீதித்துறையைச் சேர்ந்த அந்த நபர். அது சாரதியின் இடது பின்புற தலை அருகில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் சாரதிக்கு 5 தையல் போடப்பட்டுள்ளது.

``சாரதி கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர். வேலையில் கொஞ்சம் ஸ்லோவாகத்தான் இருப்பார். நேற்று தமிழில் டைப் செய்துகொண்டு போய் கொடுத்துள்ளார். அதில் அதிகமான பிழைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. திரும்பவும் டைப் செய்யச் சொல்லியிருக்கிறார். மீண்டும் டைப் செய்துகொண்டு கொடுத்தபோதும், சில பிழைகள் இருந்துள்ளதாம்.

தூத்துக்குடி நீதிமன்றம்
தூத்துக்குடி நீதிமன்றம்

அதனால், கோபத்தில் திட்டியவர், ஒரு கட்டத்தில் பேப்பர் பேடை தூக்கி வீசிவிட்டார். இதில் ஊழியர் சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என விவரித்தனர் நீதிமன்ற ஊழியர்கள் சிலர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார் பெண் ஊழியரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயம்பட்ட பெண் ஊழியர் சாரதியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு இன்று மாலை நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில்குமார், ``நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் சாரதி டைப் செய்ததில் பிழைகள் உள்ளன என்பதற்காக, மனிதாபிமானமின்றி பேப்பர் பேடை தூக்கி வீசி, 5 தையல் போடும் அளவுக்குத் தாக்கியுள்ளார்.

`பணியில் திருப்தி இல்லையென்றால் பெண் ஊழியரை இப்படியா தாக்குவது?’ - கொதித்த நீதிமன்ற ஊழியர்கள்

பணியில் திருப்தி இல்லை, பிழைகள் உள்ளன என்றால் அந்த ஊழியருக்கு மெமோ கொடுக்கலாம், சஸ்பெண்டு செய்திருக்கலாம். அதைவிடுத்துவிட்டு ஒரு நீதித்துறையை சார்ந்த ஒருவரே தாக்குதலில் ஈடுபட்டது சரியா? இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். நாளை மாலை வரை காத்திருப்போம். உயர்நீதிமன்றம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம்" என்றார்.

இதேபோல அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில், ``நீதித்துறையைச் சார்ந்த ஒருவரே இப்படித் தாக்குதலில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்த அந்த நபர் மற்றும் அவர் தரப்பை தொடர்புகொள்ள முயற்சித்தோம். இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் தரும் விளக்கத்தையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்!