Published:Updated:

`பணம் பறிக்கவும் விளம்பரத்துக்காகவும் தொடர்ந்துள்ளார்!’ - `பிகில்’ தடை கோரி வழக்கில் வாதம்

2018-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதியே பிகில் கதை பதிவு செய்யப்பட்டது. ஆனால், மனுதாரர் தன் கதையை அக்டோபரில்தான் பதிவு செய்துள்ளார்.

பிகில்
பிகில்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் `பிகில். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில், ``பிகில் திரைப்படம் தன்னுடைய கதை. 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருக்கிறேன். எனவே, பிகில் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்லி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ``கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதியே பிகில் கதை பதிவு செய்யப்பட்டது.

`டெல்லி', `கோர்ட்' வார்த்தைகளுக்கு ம்யூட்!' -'பிகில்' மூலம் மீண்டும் தேசிய அரசியல் பேசுகிறாரா விஜய்?

ஆனால், மனுதாரர் தன் கதையை அக்டோபரில்தான் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு தொடர எந்தக் காரணமும் இல்லை. ஏற்கெனவே இந்த கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றுள்ளது. அங்கு வாபஸ்பெற கூடாது என எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் அங்கே முடிந்த நிலையில் மனு வாபஸ் திரும்ப பெறப்பட்டது. இந்த வழக்கை கீழமை நீதிமன்றத்திலே விசாரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ``காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறவில்லை.

விஜய் - அட்லி
விஜய் - அட்லி

பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றனர். ``பணம் பறிப்பதற்காக இந்த வழக்கை தொடரவில்லை. `பிகில்' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று இயக்குநர் கே.பி. செல்வா தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.