Published:Updated:

`போலி பில் மூலம் சுருட்டப்பட்ட ரூ.74 லட்சம்!'‍- சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட ராமேஸ்வரம் கோயில் ஊழல்

திருக்கோயிலின் தற்காலிகப் பணியாளரான கணிப்பொறி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் என்பவர் தொழிலாளர்களின் பெயரில் செலுத்த வேண்டிய ரூ.74 லட்சம் வங்கியில் செலுத்தப்படாமல் மோசடி செய்தது தெரியவந்தது.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மோசடி தொடர்பான வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பாளர், பேஷ்கார், இளநிலை உதவியாளர்கள், அர்ச்சகர்கள், கைங்கர்யம், பாராக்காரர்கள் என 89 பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குப் புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

இதற்கென ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதமும் கோயில் நிர்வாகத்தின் மூலம் குறிப்பிட்ட சதவிகிதமும் மாதந்தோறும் எடுக்கப்பட்டு ராமேஸ்வரம் ஸ்டேட் வங்கியில் எலக்ட்ரானிக் பரிவர்த்தனை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக திருக்கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் முறையாக வரவு வைக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்ன என விளக்கம் கேட்டு திருக்கோயில் இணை ஆணையருக்குக் கடிதம் வந்துள்ளது. மேலும், ஓய்வுபெற்ற மற்றும் இயற்கை எய்திய கோயில் ஊழியர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையும் சரிவர கிடைக்கவில்லை.

இதையடுத்து வருங்கால வைப்பு நிதி கணக்கு குறித்து இணை ஆணையர் கல்யாணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருக்கோயிலின் தற்காலிகப் பணியாளரான கணிப்பொறி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் என்பவர் தொழிலாளர்களின் பெயரில் செலுத்த வேண்டிய 74 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தப்படாமல் மோசடி மூலம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்திருந்தார்.

நிதி மோசடி செய்த சிவன் அருள்குமரன்
நிதி மோசடி செய்த சிவன் அருள்குமரன்

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிரிட்டா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோயில் அலுவலகப் பதிவேடுகள், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டிய ரூ.73,4,618 கையாடல் செய்யப்பட்டதுடன், அதற்குப் போலியான ரசீதுகள் இணைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருகோயில் தற்காலிகப் பணியாளர் சிவன் அருள்குமரன், கோயில் கணக்காளர் ரவீந்திரன் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ரவீந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், தலைமறைவான மற்றொரு ஊழியரான சிவன் அருள்குமரனைத் தேடி வந்தனர். நீண்ட தேடலுக்குப் பின் அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் சிவன் அருள்குமரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ராமநாதபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரியிருந்தார் சிவன் அருள்குமரன்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிவன் அருள்குமரனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், விரிவான விசாரணை மேற்கொள்ளும் வகையில் இந்த வழக்கினை ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்ற உத்தரவிட்டார்.