Published:Updated:

விஸ்வரூம் எடுத்த ‘வியாபம்’ ஊழல்...31 பேர் குற்றவாளிகள்...தப்பிய பெருந்தலைகள்!

சிவராஜ் சிங் சௌகான்
சிவராஜ் சிங் சௌகான்

ஆளுநர் மாளிகை முதல் அத்தனை அதிகார மையங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கிளம்பிய வியாபம் ஊழல் வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என உறுதிசெய்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். நவம்பர் 25-ம் தேதி அவர்களுக்குத் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2008 முதல் 2018 வரை சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அப்போது, அந்த மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றதிலும் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதிலும் மிகப்பெரிய ஊழல்களும் முறைகேடுகளும் நடைபெற்றதாக வெளியான செய்திகள் நாட்டையே உலுக்கின.

மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை மத்தியப் பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம் (Madhya Pradesh Professional Examination Board) நடத்துகிறது. இந்த ஆணையம், ‘வியாபம்’ (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஆகவே, இது வியாபம் ஊழல் (Vyapam Scam) என்று குறிப்பிடப்படுகிறது.

மனைவியைச் சுட்டுக்கொல்ல முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ! - 3 ஆண்டு தண்டனை கொடுத்த சிறப்பு நீதிமன்றம்

வியாபம் நடத்துகிற போட்டித் தேர்வுகளின் மூலமாக முறைகேடான வழிகளில் அரசுப் பணிகளுக்கு ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளில் ம.பி-யின் அன்றைய ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பல அதிகார மையங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இதில் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் விளையாடியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

இந்த ஊழல் தொடர்பாக, ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இடைத்தரகர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே.ஷிவாரே, ஜெகதீஷ் சாகர், டாக்டர் வினோத் பண்டாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

ராம் நரேஷ் யாதவ்
ராம் நரேஷ் யாதவ்

2007-ம் ஆண்டிலிருந்து இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், 2013-ல்தான் அது வெளிச்சத்துக்கு வந்தது. மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மர்ம மரணங்கள்தான் இந்த ஊழல் வெளியே வந்ததற்கு முக்கியமான காரணம். வியாபம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், வழக்கில் தொடர்புடையவர்கள் என 47 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் அருண் சர்மா, 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இவருக்கு முன்பாக அந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் டி.கே.சகல்லேவும் மர்மமான முறையில் மரணமடைந்தார். அருண் சர்மா மரணமடைவதற்கு முந்தைய நாளில், தொலைக்காட்சி சேனல் நிருபரான அக்சய் சிங் திடீரென்று வாயில் நுரைதள்ளி மரணமடைந்தார்.

2012-ம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்த நம்ரதா தமோர் என்ற மாணவியின் சடலம் ரயில்வே தண்டவாளம் அருகில் மீட்கப்பட்டது தொடர்பாக, அந்த மாணவியின் பெற்றோரைப் பேட்டியெடுக்கச் சென்ற இடத்தில்தான் அக்சய் சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

வியாபம் ஊழல்.. பெண்கள் போராட்டம்
வியாபம் ஊழல்.. பெண்கள் போராட்டம்

டாக்டர் அருண் சர்மா, டாக்டர் சகல்லே, நம்ரதா தமோர், அக்சய் சிங் உள்பட 47 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். அந்த 47 பேருக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதுதான் இந்த ஊழல் எவ்வளவு பயங்கரமானது என்பதை உணர்த்தியது. இந்த 47 பேரும் ஏதோ ஒரு வகையில் வியாபம் ஊழலுடன் தொடர்புடையவர்கள். இறந்தவர்களில் பெரும்பாலானோர் சாலைவிபத்துகளில் மரணமடைந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

வியாபம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்குமாறு 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, 31 பேர் குற்றவாளிகள் என்று சி.பி.ஐ நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வரும் 25-ம் தேதி தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலும், ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. மாநில ஆளுநர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் என அதிகார வர்க்கத்தினர் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், பெரிய முதலைகள் எல்லாம் தப்பித்துவிட்டது போலத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு