Published:Updated:

நீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா!

நீதிமன்றம்...
பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றம்...

அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்...

நீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா!

அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்...

Published:Updated:
நீதிமன்றம்...
பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றம்...

‘‘12-ம் வகுப்புகூட பாஸ் செய்யாதவர், எப்படி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?’’ என்று கடந்த ஆண்டு அனலைக் கிளப்பிய ஒரு வழக்கு, உயர் நீதிமன்றத்தின் சவுக்கடி நடவடிக்கையால் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில் கிடைத்திருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள், தற்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வரை பஞ்சாயத்துக்குச் சென்றிருப்பதுதான் சென்னை உயர் நீதிமன்ற வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது!

சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் பதிவாளராக, மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் இருந்தவர் பூர்ணிமா. மாவட்ட நீதிபதியாகத் தேர்வு செய்யப்படுபவர்கள், 10 மற்றும் 12-ம் வகுப்பு தொடங்கி ஒரு பட்டப் படிப்பு மற்றும் சட்டப் படிப்பு ஆகியவற்றை ரெகுலர் வகுப்புகளில் பயின்றிருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ‘பூர்ணிமா ரெகுலரில் 12-ம் வகுப்புகூட பாஸ் செய்யாதவர். மாவட்ட நீதிபதியாக அவர் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்? இது குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று சதீஷ்குமார் என்ற வழக்கறிஞர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பூர்ணிமா, ரெகுலர் வகுப்புகளில் படித்த தனது சான்றிதழ்களையெல்லாம் அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹியிடம் சமர்ப்பித்து, தன்மீதான புகாருக்கு விளக்கம் அளித்தார்.

நீதிபதி ரேஸ்... பழிவாங்கப்பட்ட பூர்ணிமா!

இதையடுத்து ஏ.பி.ஷாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கு தொடர்ந்த சதீஷ்குமாருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், இந்த விவகாரத்தின் பின்னணியை விசாரிப்பதற்காக, சூமோட்டோவாக வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டார்கள். அதன்படி நீதிபதி பி.என்.பிரகாஷ், போங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்திவந்தது. இந்த விசாரணையில், சதீஷ்குமார் மட்டுமன்றி வாசுதேவன் என்ற வழக்கறிஞருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. வலைப்பின்னல் நீள்வதை அறிந்த நீதிபதிகள், கடந்த மார்ச் 10-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி, சில நாள்களுக்கு முன்பு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கைதான் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது!

அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், போங்கியப்பன் அமர்வு, ‘‘தவறிழைத்த சதீஷ்குமார், வாசுதேவனுக்கு ஆதரவாக நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே சிலர் செயல்பட்டிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியளிக்கும் இந்த ரிப்போர்ட்டை உடனடியாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பார்வைக்கு அனுப்பும்படி உத்தரவிடுகிறோம். நீதித்துறை விழுந்துவிட்டால், ஜனநாயகத்தின் ஒரு தூண் சாய்ந்துவிட்டதாகத்தான் பொருள். அதைத் தடுக்க வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ரிப்போர்ட்டில் யாரைப் பற்றி நாகஜோதி குறிப்பிட்டிருந்தார், அதனால், நீதித்துறைக்கு என்ன களங்கம் விளையக் காத்திருந்தது என்பதைப் பற்றி உயர் நீதிமன்றம் எதுவும் குறிப்பிடவில்லை.

“அப்படி என்னதான் இருந்தது அந்த அறிக்கையில்?” என்று உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘குழியிலிருக்கும் ஒரு நண்டு மேலே ஏறினால், கீழேயிருக்கும் நண்டு இழுத்து குழிக்குள் தள்ளிவிடும். அப்படி நீதிபதிகளுக்குள் நடக்கும் நண்டு விளையாட்டுதான் இது. ஒரு மாவட்ட நீதிபதி பத்து வருடங்கள் பணியாற்றிவிட்டால், பணி மூப்பின் அடிப்படையில் அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாகும் தகுதி வந்துவிடும். அப்படி வருபவர்கள்மீது ஏதாவதொரு புகாரைக் கிளப்பிவிட்டு, அவர்களை நீதிபதி ரேஸிலிருந்து கழற்றிவிடுவதற்கு, சீனியாரிட்டி பட்டியலில் கீழுள்ள நீதிபதிகள் சிலர் முயல்வது வழக்கம். பூர்ணிமா விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. நீதித்துறையைச் சேர்ந்த சிலர்மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து பூர்ணிமா சில நடவடிக்கைகளை எடுத்தார். இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்மீது தவறான குற்றச்சாட்டைப் புனைந்து சிக்கலை ஏற்படுத்த முயன்றார்கள். உயர் நீதிமன்றம் விழிப்புடன் இருந்ததால், அந்தத் தவறு முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டால், இன்னும் பல பூதங்கள் வெளியே வரும்’’ என்றார்கள்.

ஜூன் 4-ம் தேதி நீதியரசர்கள் பிரகாஷ், போங்கியப்பன் அடங்கிய அமர்வு, சதீஷ்குமாரும் வாசுதேவனும் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறியதைப் பதிவு செய்துகொண்டது. மேலும், ஜூன் 18-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட இருவரும் தங்கள் தரப்பு சார்பாக ஏதேனும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க விரும்பினால் சமர்ப்பிக்கலாம் என்றும் அவகாசம் அளித்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் பாரீஸ் கார்னரைச் சுற்றித்தான் பல மூத்த வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு பாரீஸ் கார்னரின் பரபரப்பை எகிறவைத்திருப்பது நிஜம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism