Published:Updated:

கோகோயால் பரிந்துரைக்கப்பட்ட பாப்டே... அடுத்த தலைமை நீதிபதி எப்படிப்பட்டவர்?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சக நீதிபதிகள் மத்தியில் மிகவும் மதிப்பிற்குரியவர்.

எஸ்.ஏ.பாப்டே
எஸ்.ஏ.பாப்டே

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிக்காலம் வரும் நவம்பர் 17-ம் தேதி நிறைவடைகிறது. அவருக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதி பதவிக்கு யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், தனக்கு அடுத்தபடியாக நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவைத் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு பரிந்துரைத்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சத்துக்குச் சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதினார் ரஞ்சன் கோகோய்.

ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருப்பவர் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே. இவர், சக நீதிபதிகள் மத்தியில் மதிப்பிற்குரியவராக விளங்கிவருபவர். எஸ்.ஏ.பாப்டே எனப்படும் சரத் அர்விந்த் பாப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்தவர்.

1955-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்த பாப்டேவுக்கு தற்போது 63 வயதாகிறது. இவரின் குடும்பம் வழக்கறிஞர்களால் நிரம்பியது. இவரின் தந்தை அர்விந்த் பாப்டே மகாராஷ்டிர மாநில அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். மறைந்த இவரின் அண்ணன் வினோத் அர்விந்த் பாப்டே, உச்ச நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர்.

2000-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.பாப்டே, 2012-ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, பல முக்கியமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நாடே பரபரப்புடன் கவனித்துவந்த பாபர் மசூதி – ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருப்பவர் எஸ்.ஏ.பாப்டே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

``ஆதார் இல்லை என்பதற்காக நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகளையோ, அரசு மானியங்களையோ மறுக்கக் கூடாது".
எஸ்.ஏ.பாப்டே

எட்டு ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பாப்டே, பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். பெண் ஒருவர் தன் வயிற்றில் வளரும் சிசுவைக் கொல்வதற்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த அமர்வில் எஸ்.ஏ.பாப்டே இடம்பெற்றிருந்தார்.

``ஆதார் இல்லை என்பதற்காக நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகளையோ, அரசு மானியங்களையோ மறுக்கக் கூடாது" என்று ஒரு தீர்ப்பை இவர் வழங்கியுள்ளார். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி 2016-ம் ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனையை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

அதே நேரம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பெண் ஒருவர் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து, எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நடைபெற்ற விசாரணை மீது விமர்சனங்கள் எழுந்தன.

உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து உச்ச நீதிமன்றமே விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டது.

ரஞ்சன் கோகோய்க்கு அடுத்த நிலையில் இருக்கும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, தன் தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை நியமித்தார். நீதிபதிகள் ரமணா, இந்திராணி பானர்ஜி ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டத்தின்படி, வெளிநபர் ஒருவர் அதில் இடம்பெற வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாங்களாகவே, தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரித்தார்கள்.

அது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட பெண்கள் இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினர். ஆனாலும், வெளியிலிருந்து யாரும் அந்தக் குழுவில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. கடைசியில், ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று அந்தக்குழு முடிவுசெய்தது.

Vikatan