Published:Updated:

புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே யார்? அவருக்கும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கும் என்ன தொடர்பு?

ரஞ்சன் கோகோய் நேற்று பணி ஓய்வுபெற்றதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் பாப்டே, ஓர் ஆஞ்சநேய பக்தர் என்பது ஒரு சுவாரஸ்யத் தகவல்.

எஸ்.ஏ.பாப்டே
எஸ்.ஏ.பாப்டே

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி பணி ஓய்வுபெற்றார். அவரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றார். இவர், உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகோய்க்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்தவர். எஸ்.ஏ.பாப்டே எனப்படும் சரத் அர்விந்த் பாப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1955-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தவர். இவரின் குடும்பம் வழக்கறிஞர்களால் நிரம்பியது. பாப்டேயின் தந்தை அர்விந்த் பாப்டே மகாராஷ்டிர மாநில அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் சிலை
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் சிலை

மறைந்த, இவரின் அண்ணன் வினோத் அர்விந்த் பாப்டே, உச்ச நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். இவர், நான்காம் தலைமுறை வழக்கறிஞர். ஆனாலும், குடும்பத்தில் இவர்தான் முதல் நீதிபதி. இவருக்கு பைக் ஓட்டுவதும், போட்டோகிராஃபியும் மிகவும் பிடிக்கும். இவர் ஓர் ஆஞ்சநேயர் பக்தரும்கூட. நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு இவர் அடிக்கடி வருகை தருவார் என்கிறார்கள் நாமக்கல் வட்டாரத்தில்.

ஜெயலலிதா 2½ ஆண்டுக்கு... ராமதாஸ் 2½ ஆண்டுக்கு - இன்றைக்கு சிவசேனா கேட்பதை அன்றே கேட்ட ராமதாஸ்!

2000-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.பாப்டே, 2012-ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பாபர் மசூதி – ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்தவர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் விசாரணை நடைபெற்றது. கடைசியில், ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று அந்தக்குழு முடிவுசெய்தது. அது கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஆனாலும், நீதிபதிகள் மத்தியில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

எஸ்.ஏ.பாப்டேவை உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இவர், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார். 2013-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவர் பதவியேற்றது முதல் கடந்த அக்டோபர் வரை 62 தீர்ப்புகளை எழுதியிருக்கிறார். நீதித்துறையில் தற்போது இருக்கக்கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்பது இவர் முன்பாக உள்ள மிகப்பெரிய சவால் என்று கருதப்படுகிறது.

ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய்

பாபர் மசூதி - ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது மட்டுமல்ல, நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் சர்ச்சைக்குரிய சில தீர்ப்புகள் எனப் பல விஷயங்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இது குறித்து எஸ்.ஏ.பாப்டேவிடம் கேட்கப்பட்டபோது, “நீதித்துறை மட்டுமல்ல.... பெற்றோர், பள்ளிக்கூடங்கள், நாடாளுமன்றம் என எல்லா அதிகாரங்களுக்கும் சவால் உள்ளது.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கிற, அதிகாரத்துக்கு சவால் விடுகிற காலம் இது. கேள்வி கேட்பது ஆரோக்கியமானது. ஆனால், அது பொய்யானதாகவோ, தீய நோக்கத்துடனோ இருக்கக்கூடாது. நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல் தேவையில்லாதது, அழிவை உண்டாக்கக்கூடியது” என்று கூறியிருக்கிறார்.