Published:Updated:

ராஜ வம்சம்... 15 ஆண்டு அனுபவம்... சென்னைத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட ஏ.பி.சாஹி யார்?

கடந்த ஆண்டு ஜூனில் தனது சொந்த மாநிலமான பீகார் தலைநகரான பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சாஹி.

ஏ.பி.சாஹி
ஏ.பி.சாஹி

மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ததன் காரணமாக, தன் பதவியை ராஜினாமா செய்தார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி. இடமாற்றம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், அவமானமாகவும் கருதி தன்னுடைய பதவியைத் துறந்தார் தஹில் ரமானி. இவருக்கு ஆதரவாகக் களமிறங்கிய வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ததுடன் போராட்டம் நடத்தினர். இடமாற்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அறிவிப்பு திரும்பப் பெறப்படவில்லை. இதையடுத்து அவருக்குச் சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரிவு உபசார விழா எடுத்து கனத்த இதயத்துடன் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

ஏ.பி.சாஹி
ஏ.பி.சாஹி

ரமானி இடத்துக்கு மேகாலயா நீதிபதி ஏ.கே.மிட்டல்தான் முதலில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அந்த அறிவிப்பும் மாற்றப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பெயரை கொலிஜியம் இன்று பரிந்துரைத்துள்ளது. மேலும் மேகாலயா நீதிபதி ஏ.கே.மிட்டலை மத்திய பிரதேசத்துக்கும், திரிபுரா தலைமை நீதிபதி சஞ்சய் கரோலை பாட்னா நீதிமன்றத்துக்கும் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு இன்னும் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுப்பார் எனத் தெரிகிறது.

தஹில் ரமானி விவகாரத்தில் அடுத்து என்ன.. சி.பி.ஐ எடுக்கும் ரெய்டு அஸ்திரம்?

யார் இந்த ஏ.பி.சாஹி?

அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி என்னும் நீதிபதி ஏ.பி.சாஹி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1767ல் இருந்து 20 ஆண்டு கொரில்லாப் போரை நடத்திய பெருமைக்குரிய தம்குஹி எனும் ராஜ வம்சத்தில் பிறந்தவர்தான் சாஹி. 1959-ல் பிறந்தவர் 1985-ல் சட்டப்படிப்பை முடித்தபின் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். இதன்பின் 2004-ல் தான் வழக்கறிஞராகப் பணிக்குச் சேர்ந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், அடுத்த ஆண்டே நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.

ஏ.பி.சாஹி
ஏ.பி.சாஹி

கடந்த ஆண்டு ஜூனில் தனது சொந்த மாநிலமான பீகார் தலைநகரான பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சாஹி. அங்கு 15 மாதங்களாகப் பணிபுரிந்துவந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் அலகாபாத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தபோது உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய ரூ.10,000 கோடி ஊழல் வழக்கான தேசிய ஊரக சுகாதாரப் பணி ஊழல் வழக்கிலும், பாட்னாவில் பணியாற்றியபோது ஜிபிஎப் ஊழல் வழக்கில் சிறப்பாகத் தீர்ப்பளித்ததற்காக அதிகமாகப் பாராட்டப்பட்டவர். நாட்டின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவராக அறியப்படும் சாஹி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற உள்ளார். ஒருவேளை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் ஒரு வருடம் மட்டுமே இங்கு பணிபுரிவார்.

`சென்னையிலே குடியேற விரும்புகிறேன்!’- பிரிவு உபசார விழாவில் தஹில் ரமானி உருக்கம்