Published:Updated:

`துப்பாக்கிச்சூடு நாளில் பணியிலிருந்த உயரதிகாரிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை!' - ஹென்றி திபேன்

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து மூன்றாண்டைக் கடந்த நிலையில் ஆறு மாத அவகாசம் நீட்டிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அன்றைய தினம் பணியிலிருந்த உயரதிகாரிகள் ஒருவர்கூட இன்னும் விசாரிக்கப்படவில்லை” என ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒர நபர் விசாரணை ஆணையம் 28 கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இந்தநிலையில், கடந்த 22-ம் தேதியுடன் ஆணையத்துக்கு அளிக்கபட்டிருந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 23-ம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு 2022, பிப்ரவரி 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை 23-ம் தேதி தொடங்கியது.

ஆணையத்தின் முன்பு ஆஜராக வந்த ஹென்றி திபேன்
ஆணையத்தின் முன்பு ஆஜராக வந்த ஹென்றி திபேன்

வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடைபெறவிருக்கிறது. இந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம்பட்ட காவலர்கள், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வழக்கறிஞர்கள், என 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. விசாரணையின் முதல் நாளில், மதுரையைச் சேர்ந்த ’மக்கள் கண்காணிப்பக’த்தின் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஆணையத்தின் முன்பு ஆஜரானார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் ஒருநபர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி எழுத்துபூர்வமாக எனது வாதங்களை முன்வைத்தேன்.

இதைத் தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக இன்று ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராவதற்கு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னும் 400 பேர் வரை விசாரிக்க வேண்டிய நிலையில் ஆணையம், மேலும் ஆறு மாத காலம் நீட்டிப்பு கேட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசும் கால நீட்டிப்பை வழங்கியிருக்கிறது. மற்றுமொரு வருத்தம் என்னவென்றால், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னமும் உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அன்றைய தினம் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு அளித்ததாகக் கூறப்படும் தாசில்தார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

ஒரு மாதத்தில் வெறும் ஐந்து நாள்கள் மட்டுமே விசாரணை ஆணையம் செயல்படுகிறது. ஐந்து நாள்கள் மட்டும் விசாரணை நடத்தப்பட்டால் எப்படி விசாரணையை விரைந்து முடிக்க முடியும்? ஏற்கெனவே மூன்றாண்டைக் கடந்த நிலையில் மேலும் ஆறு மாத கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா காலகட்டத்திலும்கூட சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்திலோ அல்லது தூத்துக்குடியிலுள்ள முகாம் அலுவலகத்திலோ சாட்சிகள் ஓர் அறையிலும், விசாரணை அதிகாரிகள் ஓர் அறையிலும் அமர்ந்து விசாரணையை நடத்தி முடித்திருக்கலாம். அதற்கும் வழி இல்லையெனில் ஆன்லைன் மூலமாக `மெய்நிகர் விசாரணைக் கூடம்’ நடத்தி விசாரணையை மேற்கொண்டிருக்கலாம். ஆணையத்தின் தாமதப் பணிகள் எங்களைப் போன்றோருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான ஹென்றி திபேன்
விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான ஹென்றி திபேன்

எனவே, அரசு கூறியுள்ளபடி இன்னும் ஆறு மாத காலத்துக்குள் முழு விசாரணை நடத்தி, துப்பாக்கிச்சூடு கலவரம் தொடர்பான முழு அறிக்கையையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரசுக்குத் தர வேண்டும் என்பதே எனது விருப்பம். `நஷ்ட ஈடு’ நீதி கொடுக்காது, சி.பி.ஐ நீதி தராது. மாறாக, துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்களில் குறைந்தபட்சம் சிலராவது இந்நேரம் சிறைக்குச் சென்றிருக்க வேண்டும். எனவே, விரைந்து விசாரணையை முடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு சம்மன்! - ஒருநபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை தொடக்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு