Published:Updated:

சுடிதார் வாங்கிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்! - வணிக நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் அபராதம்

தீபாவளி பண்டிகைக்கு சுடிதார் வாங்கிய சிறுமிக்கு, அளவு சரியில்லாததால் அதைப் போட்டு அழகு பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன், துணிக் கடையில் இயற்கை உபாதையைக் கழிக்கக் கூட இடம் இருக்கவில்லை. அந்தக் கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

consumer court
consumer court

நெல்லை டவுனில் அபிராமி சாரீஸ் அண்ட் ரெடிமேட்ஸ் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு துணி எடுப்பதற்காக அக்டோபர் 16-ம் தேதி அந்தக் கடைக்கு கோமதி என்பவர் தனது இரு மகள்களுடன் சென்றுள்ளார். இளைய மகளான தர்ஷினி என்பவருக்கு எடுத்த துணியின் அளவு சரியாக இருந்துள்ளது.

Representational Image
Representational Image

துணிக்கடையில் கழிப்பிட வசதி மற்றும் ட்ரையல் ரூம் போன்ற வசதிகள் இருக்கவில்லை. அதனால் 11 வயது நிரம்பிய மூத்த மகள் மகாலட்சுமி தாரணிக்கு வாங்கிய அனார்கலி சுடிதாரைப் போட்டுப் பார்க்க முடியவில்லை. அந்த உடையின் அளவு சரியானதாக இருக்கும் எனக் கடையின் பணிப்பெண் அளித்த உத்தரவாதம் காரணமாக அணிந்து கூடப் பார்க்காமல் அதை எடுத்துச் சென்றுள்ளார்.

துணை ஆணையரின் ஸ்ட்ரிக்ட் & ஸ்மார்ட் நடவடிக்கை- ’ஸ்கோச்’ விருது வென்ற நெல்லை மாநகர போலீஸ்!

துணிக்கடையில் இருந்தபோது கோமதியின் இளைய மகள் தர்ஷினிக்கு இயற்கை உபாதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கடையில் அதற்கான வசதி இருக்கவில்லை. இதுபற்றிக் கேட்டதற்கு கடையின் பணியாளர்கள், பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியிருக்கிறார். அது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

அத்துடன் மகாலட்சுமி தாரணிக்கு வாங்கிய அனார்கலி சுடிதாரின் பேண்ட் அணிய முடியாத அளவுக்குச் சிறியதாக இருந்துள்ளது. அதனால் சிறுமி மகாலட்சுமி தாரணியால் தீபாவளிக்குப் புத்தாடை அணிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோமதி, அந்தக் கடைக்குச் சென்று சுடிதாரை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டதற்கு அதைச் செய்து கொடுக்கக் கடை நிர்வாகம் மறுத்துள்ளது.

புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்... 10 முக்கிய அம்சங்கள்!

தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாடு தொடர்பாகச் சிறுமி மகாலட்சுமி தாரணியின் தாய் கோமதி, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா மூலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் . அதில் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைப்பாடுக்கு கடை நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். 

Advocate Bhrama
Advocate Bhrama

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களான சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் ரெடிமேட் நிறுவனம் செய்தது நேர்மையற்ற வாணிபம் மற்றும் சேவை குறைபாடு எனத் தீர்ப்பளித்தனர்.

மனுதாருக்கு சேவைக் குறைப்பாடு அளித்த வணிக நிறுவனம், மனுதாருக்கு ஏற்படுத்திய மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.15,000 மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். அத்துடன், மனுதாரரிடம் கொடுத்த அனார்கலி சுடிதாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கான விலையாகச் செலுத்தப்பட்ட ஆயிரம் ரூபாயையும் திரும்பக் கொடுக்க வேண்டும். 

consumer court
consumer court

இந்த அபராதத் தொகையை ஒரு மாத காலத்துக்கு வணிக நிறுவனம் வழங்க வேண்டும். அப்படிக் கொடுக்கத் தவறினால் ஆறு சதவிகிதம் வட்டியுடன் இழப்பீட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகச் சிறுமி மகாலட்சுமி தாரணி தெரிவித்தார்