Published:Updated:

நெல்லை: பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்... ரூ.20,001 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!

நுகர்வோர் நீதிமன்றம்
நுகர்வோர் நீதிமன்றம்

அரசு அனுமதியின்றி பேருந்துக் கட்டணத் தொகையைவிடக் கூடுதலாக ஒரு ரூபாய் வசூல் செய்த தனியார் பேருந்து நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நெல்லை, பாளையங்கோட்டை முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 1-ம் தேதி நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்.

`சென்னை டு நெல்லை; தண்ணீர் வசதி இல்லாத ரயில் பயணம்!’- அதிரடி காட்டிய நுகர்வோர் நீதிமன்றம்

அவரிடம் பயணக் கட்டணமாக ரூ.25 பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட்டை பேருந்தின் நடத்துநர் கொடுத்திருக்கிறார். அனைத்துப் பேருந்துகளிலும் ரூ.24 மட்டுமே கட்டணமாக வசூகிக்கப்படும் நிலையில், கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இசக்கிமுத்து, இது குறித்து பேருந்தின் நடத்துநரிடம் கேட்டிருக்கிறார்.

`ஸ்டாக் பழசு... விலையோ புதுசு!’- வணிக நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

பேருந்து நடத்துநர் அவருக்கு உரிய பதிலைத் தெரிவிக்காமல், `இந்தப் பேருந்தில் அப்படித்தான் வசூலிப்போம். டிக்கெட்டுக்கான சீட்டைப் பெற்றுக்கொண்டீர்கள் அல்லவா... இனி எதையும் கேட்கக் கூடாது. இதற்கு மேலும் பேசினால், பேருந்திலிருந்து இறக்கிவிட்டு விடுவேன்’ என அனைத்துப் பயணிகளுக்கு மத்தியில் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்
நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

இதனால் மிகுந்த மனவேதனையடைந்த இசக்கிமுத்து, இது தொடர்பாக பேருந்து நிறுவன உரிமையாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் புகார் செய்தார். பேருந்து நிறுவனத்தினர், தங்களுக்கு அந்த வழித்தடத்தில் பேருந்து எதுவும் இயங்கவில்லை என்றும், ஸ்ரீதர் ரோடுவேஸுக்குச் சொந்தமான பேருந்து மட்டுமே இயங்கிவருவதாகவும் தவறான தகவலைத் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக வட்டாரப் பேருந்து அலுவலரிடம் முறையிட்டதால், அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டதில், `திருநெல்வேலி-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு ரூ.24 மட்டுமே அரசுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்
அபராதம்

அதனால் தனக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானத்துக்குக் காரணமான பேருந்து நிறுவனம் மற்றும் நடவடிக்கை எடுக்காத வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு 95,000 ரூபாய் அபராதம் விதிக்கக் கோரியும் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இசக்கிமுத்து.

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பிரம்மா ஆஜராகி, `பேருந்தில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றிருக்கும் மனுதாரர் ஒரு நுகர்வோர். அவருக்குச் சேவைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

வழக்கறிஞர் பிரம்மா
வழக்கறிஞர் பிரம்மா

இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவன்மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் அளித்த தீர்ப்பில், `சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மனுதாரர் இசக்கிமுத்துக்கு ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 மற்றும் கூடுதலாக வசூலித்த கட்டணத் தொகை ரூ.1 ஆகியவற்றை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். தவறினால் ஆறு சதவிகித வட்டியுடன் கொடுக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு