Published:Updated:

`சென்னை டு நெல்லை; தண்ணீர் வசதி இல்லாத ரயில் பயணம்!’- அதிரடி காட்டிய நுகர்வோர் நீதிமன்றம்

ரயில்
ரயில்

முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் தண்ணீர் வராததால் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர். பயணி ஒருவர் கொண்டு சென்றிருந்த ரொட்டியை எலி கடித்து விட்டதால் உணவு கிடைக்காத நிலையில் இரவு முழுவதும் பயணம் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், முகம்மது அய்யூப். அவர் 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து (எஸ்-2 பெட்டியில்) பயணம் செய்துள்ளார். சென்னையிலிருந்து நெல்லைக்குப் பயணம் செய்த அவரது பெட்டியில், ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தண்ணீர் தீர்ந்து விட்டது. 

ரயில்
ரயில்

இரவு 9.15 மணிக்கு எஸ்-2 பெட்டியில் தண்ணீர் வராததால் பயணச் சீட்டுப் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீஸிடம் புகார் செய்தார். ஆனாலும் தண்ணீர் வரவில்லை. அதனால் உடல் உபாதையைக் கழிக்க வழியின்றி இரவு முழுவதும் தவித்துள்ளார்.

ரயில் பெட்டியில் தண்ணீர் வராததால் கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அந்தப் பெட்டிக்குள் உணவு விற்பனை செய்வதற்குக் கூட ஆள் வரவில்லை. இதனிடையே, ரயில் பெட்டியில் எலித் தொல்லை இருந்துள்ளது. அதனால் முகம்மது அய்யூப் கொண்டு சென்றிருந்த ரொட்டியை எலி கடித்துவிட்டது. 

வழக்கறிஞர் பால்ராஜ்
வழக்கறிஞர் பால்ராஜ்

அதனால் இரவு முழுவதும் உடல் உபாதையைக் கழிக்க முடியாமல் வயிற்று வலியுடன் அவதிப்பட்டுள்ளார். உணவும் இல்லாததால் பசியுடன் இரவு முழுவதும் இருந்திருக்கிறார். இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் வழக்கறிஞர் பால்ராஜ் மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ரயில் பயணி என்பவர் நுகர்வோர் அல்ல என ரயில்வே தரப்பில் வாதிடப்பட்டது. அதை மறுத்து வழக்கறிஞர் பால்ராஜ் வாதிட்டார். ரயில்வே தரப்பினர், ”எஸ்-2 ரயில் பெட்டியின் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் வரவில்லை. அதனால் மறு பகுதியில் இருந்த டாய்லெட் அல்லது அடுத்த ரயில் பெட்டியின் டாய்லெட்டை மனுதாரர் பயன்படுத்தி இருக்கலாம். 

`ஸ்டாக் பழசு... விலையோ புதுசு!’- வணிக நிறுவனத்துக்கு அபராதம் விதித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம்

தண்ணீர் இல்லை என்று தெரிய வந்ததும் விழுப்புரத்திலேயே அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் மனுதாரர், நெல்லை பயணம் வரையிலும் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு” என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தேவதாஸ், உறுப்பினர்களான சிவன்மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ”ரயில் பெட்டியில் தண்ணீர் இல்லை என்பதை ரயில்வே நிர்வாகமே ஒப்புக்கொண்டிருக்கிறது. அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரயிவே நிர்வாகம் ரூ.5,000, வழக்குச் செலவுத் தொகையாக ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

நுகர்வோர் கோர்ட்
நுகர்வோர் கோர்ட்

இந்தத் தொகையை மனுதாருக்கு ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கத் தவறினால், 6 சதவிகித வட்டியுடன் அந்தத் தொகையைக் கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு