Published:Updated:

நீதிமன்றம் அதிரடி: டாக்டர் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஜாமீன் மறுப்பு

வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட  டாக்டர் சைமன்
News
வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட டாக்டர் சைமன்

ஜாமீன் மனுத்தாக்கல் செய்த பலர், தங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தவறுதலாக தங்கள் மீது புகார் அளித்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

சென்னை பூந்தமல்லியில் மருந்துவமனை நடத்தி வந்த டாக்டர். சைமன் கொரோனா தாக்கி உயிரிழந்தார். இவரின், உடலை பூந்தமல்லி சிமிட்ரி போர்டு கல்லறைத் தோட்டத்தில் புதைக்க சர்ச் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், அரசு நெறிமுறைப்படி கொரோனாவால் இறந்தவர்கள் உடலை நகராட்சிக்குச் சொந்தமான கல்லறைகளில்தான் புதைக்க வேண்டும் என்பதால், பூந்தமல்லி பகுதியில் உள்ள, மாநகராட்சிக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்து ஏற்பாடு செய்தனர். பூந்தமல்லி கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், வேலங்காடு இந்து மயானத்துக்கு டாக்டர் உடல் கொண்டு செல்லப்பட்டது. வேலங்காடு சுடுகாட்டில், மக்களுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளை மக்கள் தாக்கினர். பின்னர் நள்ளிரவு 1.30 மணியளவில் டாக்டர் சைமனின் நண்பர் பிரதீப் என்பவர் சில போலீஸார் உதவியுடன் தன் உயிரைப் பணயம் வைத்து, வேலங்காடு மயானத்தில் டாக்டர் சைமனின் உடலை புதைத்தார்.

வேலங்காட்டில் டாக்டர் சைமன் புதைக்கப்பட்ட இடம்
வேலங்காட்டில் டாக்டர் சைமன் புதைக்கப்பட்ட இடம்

டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தி, தன் கணவரின் உடலை வேலங்காடு மயானத்திலிருந்து எடுத்து வந்து, பூந்தமல்லி சிமிட்ரி போர்டு கல்லறைத் தோட்டத்தில் புதைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மயிலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, டாக்டர் சைமனின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் பூந்தமல்லி சிமிட்ரி கல்லறைத் தோட்டத்தில் புதைக்க எல்லாவிதமான ஒத்துழைப்பு தருவதாகவும் அறிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தொடர்ந்து டாக்டர் சைமனின் உடலைத் தோண்டியெடுத்து மீண்டும் பூந்தமல்லி கல்லறைத் தோட்டத்தில் புதைப்பது பாதுகாப்பானதா... சாத்தியமா என்பது குறித்து ஆராய சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்துள்ள அறிக்கையின்படி, `டாக்டரின் உடலை மறுபடியும் கொண்டுவந்து புதைப்பது சாத்தியமற்றது; பாதுகாப்பற்றது' என்று அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தியின் கோரிக்கையை பாதுகாப்பு கருதி நிராகரிப்பதாக கூறியுள்ளார். இதனால், வேலங்காடு சுடுகாட்டிலேயே டாக்டர் சைமனின் உடல் புதைக்கப்பட்டது புதைக்கப்பட்டதாகவே இருக்கும். வேலங்காடு சுடுகாட்டுக்கு நாம் சென்று பார்த்தபோது, அவரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர்கள் தூவப்பட்டு சிலுவை ஒன்றும் அதன் மேல் நிறுவப்பட்டிருந்தது.

வேலங்காடு மயானம்
வேலங்காடு மயானம்

டாக்டர் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே வேலங்காடு சுடுகாட்டில் பணிபுரிந்த சில இளைஞர்கள் இருந்தார்கள் அவர்களிடத்தில் பேசியபோது, ``கொரோனா பாதிப்பால் இறந்த ஒருவரை அறியாமை காரணமாகவே இந்தப் பகுதி மக்கள் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனரே தவிர, மத வேறுபாடு பார்த்தாகத் தெரியவில்லை. மேலும், டாக்டரின் உடலை இங்கு கொண்டு வருவது குறித்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் சொல்லவில்லை. முதலிலேயே தகவல் கூறியிருந்தால் நாங்கள் குழி தோண்டி வைத்திருந்திருப்போம். பொக்லைன் இயந்திர உதவி கூட இல்லாமல் உடலைப் புதைக்க உதவியிருப்போம்'' என்று ஆதங்கத்துடன் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாக்டர் சைமனின் உடலை வேலங்காடு மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுகாதாரப்பணியாளர்களைத் தாக்கியதாக 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 23 பேர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், பேரிடர் காலத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாகக் கூறி ``ஜாமீன் வழங்கப்பட்டால் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையாது'' என்றும் கூறியுள்ளது.

கொரோனா
கொரோனா

ஜாமீன் மனுத் தாக்கல் செய்த பலர், தங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தவறுதலாக தங்கள் மீது புகார் அளித்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதையும், நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால், டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தற்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களில் சிலர், `கொரோனா காலத்தில் இப்படி வந்து சிறையில் சிக்கிக்கொண்டோமே' என்று கலங்கியுள்ளனர். மேலும், சிலர் அரசு இந்த விஷயத்தில் இந்தளவுக்கு உக்கிரம் காட்டும் என்பது தெரியாமலே விளையாட்டுத்தனமாக கூட்டத்தோடு கூட்டமாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கியுள்ளனர். தற்போது, அவர்களும் `தெரியாமல் சிக்கிக்கொண்டேனே ' என்று கதறுகிறார்கள்.

டாக்டர் சைமனின் உடலை மறுபடியும் தோண்டியெடுத்து கீழ்ப்பாக்கம் சிமிட்ரி போர்டு கல்லறைத் தோட்டத்தில் புதைக்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாட அவரின் மனைவி ஆனந்தி முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஆனந்தியின் கருத்தை அறிய டாக்டர் சைமனின் நெருங்கிய நண்பரும் அவரின் உடலை வேலங்காட்டில் அடக்கம் செய்தவருமான டாக்டர் பிரதீப்பிடம் பேசியபோது, `இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் சைமனின் குடும்பத்தினர் மீடியாக்களிடத்தில் பேச விரும்பவில்லை' என்று கூறிவிட்டார்.