Published:Updated:

ரயில்களில் சிசிடிவி கேமரா! - நீதிமன்றம் அதிரடி

ஆ.பழனியப்பன்

பெண்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி, ரயில்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்
ரயில்

2008-ம் ஆண்டு வினோத் என்ற இளைஞர் காவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். ரயில்வே காவலராக நியமிக்கப்பட்ட இவர், 2014-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். இவருடன் பெண் காவலர் ஒருவரும் பணியில் இருந்தார்.

ரயில்
ரயில்

மறுநாள் காலையில், அந்த ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய செல்போன் நம்பரை காவலர் வினோத் வாங்கிக்கொண்டு, தவறானரீதியில் பேசினார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில், 2015-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவர், தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மேல்முறையீடு மனு செய்தார். அதைப் பொதுமேலாளர் நிராகரித்துவிட்டார். அதையடுத்து, பணிநீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார் வினோத்.

ரயில்
ரயில்

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ``பெண் பயணியிடம் காவலர் வினோத் அநாகரிகமாக போனில் பேசியதாக, உடன் இருந்த பெண் காவலரே தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காவலர் வினோத்தின் மனுவை நிராகரித்தார். மேலும், ``இரவு நேரத்தில் நீண்ட தூரத்துக்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஓடும் ரயிலில் இந்தப் பெண்களுக்கு எந்த உதவியும் இருப்பதில்லை. எனவே, பெண் பயணிகள், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்” என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.