Published:Updated:

ப.சிதம்பரம் கைது விவகாரம்... எல்லாமே புதுசு... ஆனா, ஒண்ணு மட்டும் ரொம்பப் பழசு!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை என இரு தரப்பிலிருந்தும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அமலாக்கத்துறையினரின் கஸ்டடியிலிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். நம் தலைவர்களுக்குச் சிறைக் கம்பிகள் ஒன்றும் புதிதில்லைதான். ஆனால் இவர் விஷயத்தில் மட்டும் நிறையவே புதுமைகள் இருக்கின்றன. சுவர் ஏறிக் குதித்த சி.பி.ஐ தொடங்கி, இந்தக் கைது நடைமுறையா அல்லது பழிவாங்கலா என்ற சூடான விவாதங்கள் எல்லாம் தொடர்ந்து, சி.பி.ஐ வழக்கில் திஹார் சிறையிலிருந்த அவரை விசாரணை முடிந்த கையோடு அங்கிருந்தே அமலாக்கத்துறை கைது செய்தது வரை எல்லாமே புதுசுதான். ஆனால், இவர் ஜாமீன் மறுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மட்டும் பழசிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதுதான் இப்போது மிகப்பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

2007-ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் சிதம்பரம். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை என இரு தரப்பிலிருந்தும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த எதிர்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இது மட்டுமல்ல, கவனிக்கப்பட வேண்டிய செய்தி, நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் அளித்த 41 பக்கத் தீர்ப்பில், குறிப்பிட்ட சில பகுதிகள் அமலாக்கத் துறையின் எதிர்மனு மற்றும் வேறு ஒரு தீர்ப்பிலிருந்து அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக `Wire’ பத்திரிகை கண்டறிந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

Delhi High Court
Delhi High Court

எதிர்மனுதாரரான அமலாக்கத் துறையின் மனுவில் இடம்பெற்றிருக்கும் அதே வாக்கியங்களும் பாராக்களும் இல்லாமல், குறைந்தபட்சம் வாக்கியங்களையாவது மாற்றி அமைத்திருக்கலாம் என்று, தீர்ப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

``கோயில் நிலத்தை ஆக்கிரமித்தாரா ராமதாஸ்?''- ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டும் பா.ம.கவினரின் பதிலும்!

நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் எழுதிய தீர்ப்பில், அமலாக்கத் துறையின் எதிர் மனுவில் உள்ள வாசகங்கள் மட்டுமல்லாது, 2017 ஆம் ஆண்டு வேறொரு ஜாமீன் மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பின் வரிகளும் அப்படியே இடம் பெற்றிருக்கின்றன. அமலாக்கத் துறைக்கும் ரோஹித் டாண்டன் என்பவருக்கும் இடையேயான வழக்கில், நீதிபதி S.P.கார்க் கொடுத்த தீர்ப்பில் `15.11.2016 முதல் 19.11.2016 வரை 31.75 கோடி ரூபாய் வரை 8 வங்கிக் கணக்குகளில் கோடக் மஹிந்திரா பேங்க் கிளைகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேதி, தொகை என எதையும் மாற்றாமல் அப்படியே அதே வாசகங்கள், நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் எழுதிய இந்தத் தீர்ப்பிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த வாசகங்களுக்கும் ப.சிதம்பரத்தின் வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

வழக்கு
வழக்கு
Pixabay

இது மட்டுமல்ல இதே ரோஹித் டாண்டன் வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்தும் இரண்டு பாராக்கள் ப.சிதம்பரம் வழக்கின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன. ஒருவேளை இறுதியாக இரு பக்கங்கள் கூடுதலாக இணைந்து தீர்ப்பு வெளியாகி இருந்தால், இதை நீதிமன்ற அலுவல் பிழை (Clerical error) என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், 41 பக்கத் தீர்ப்பின் இடையிடையே, வாக்கிய தொடக்கத்தில் மட்டும் சிறு மாற்றத்தோடு இடைச்செருகலாக இப்படிப் பல பகுதிகள் வெட்டி ஒட்டப்பட்டிருப்பது, நீதி வழங்குதலில் இருக்கும் கவனப்பிழையையே காட்டுகிறது.

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்து விளக்கம் கொடுத்திருக்கும் நீதிபதி கெயிட், `இந்தத் தீர்ப்பு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது கிடையாது. மேற்கோள் காட்டுவதற்காக மட்டுமே டாண்டன் வழக்கை தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இந்த வழக்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கையே என்று ஒரு சாரார் உறுதியாகக் கூறிக்கொண்டிருக்க, நீதித்துறையின் நடுநிலைமை கேள்விக்குறியாகி இருக்கும் இன்றைய இந்தியச் சூழலில், தேசமே உற்றுநோக்கும் ஒரு வழக்கின் தீர்ப்பில் இத்தகைய பிழைகளும் கவனக் குறைபாடுகளும் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும் விதமாகவே இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரது தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது, அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு