Published:Updated:

`குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.16,000 அபராதம்!' - தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

தூத்துக்குடியில் போதையில் பைக் ஓட்டி வந்தவருக்கு உரிமம் இல்லாதது, ஹெல்மெட் அணியாதது என்பது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

தூத்துக்குடி நீதிமன்றம்
தூத்துக்குடி நீதிமன்றம்

தூத்துக்குடியில் போதையில் பைக் ஓட்டி வந்தவருக்கு உரிமம் இல்லாதது, ஹெல்மெட் அணியாதது என்பது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அபராதமாக விதித்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இப்புதிய சட்டத்தின்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டுபவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அபராதம் கட்டிய ரசீது
அபராதம் கட்டிய ரசீது

சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5,000 அபராதம் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வருபவர்களைப் போக்குவரத்து போலீஸார் பிடிக்கும்போது பழைய சட்ட விதிகள்படிதான் அபராதம் விதிக்கின்றனர். புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசிடமிருந்து உரிய உத்தரவு வந்த பின்னர்தான் புதிய விதிப்படி அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் தமிழகத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, புதிய சட்டவிதிகள்படி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லையில் விஷ்வா என்ற வாலிபருக்கு, போதையில் வாகனம் ஓட்டி வந்த குற்றத்துக்காக ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தூத்துக்குடியில் போதையில் வாகனம் ஓட்டி வந்த சண்முகநாதன் என்பவருக்கு புதிய வாகன சட்டப்படி ரூ.16,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டி வந்துள்ளார்.

நீதிமன்ற வளாகம்
நீதிமன்ற வளாகம்

சோதனையில் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து சண்முகநாதன் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை தூத்துக்குடி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போதையில் பைக் ஓட்டி வந்ததற்கு ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.5,000, ஹெல்மெட் அணியாததற்கு 1,000 ரூபாய் என சண்முகநாதனுக்கு மொத்தம் ரூ.16,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதை அவர் நீதிமன்றத்தில் அபராதத் தொகையைச் செலுத்தி பறிமுதல் செய்யப்பட்ட தனது பைக்கை மீண்டும் பெற்றுக்கொண்டார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.