Published:Updated:

சிவசேனா: `தேர்தல் கமிஷன் முடிவுசெய்யத் தடை விதிக்க வேண்டும்’ - உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

``உண்மையான சிவசேனா எது என்று முடிவுசெய்ய தேர்தல் கமிஷனுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சிவசேனா: `தேர்தல் கமிஷன் முடிவுசெய்யத் தடை விதிக்க வேண்டும்’ - உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே

``உண்மையான சிவசேனா எது என்று முடிவுசெய்ய தேர்தல் கமிஷனுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ-க்கள் தனியாக பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளனர். தற்போது யாருடைய அணி உண்மையான சிவசேனா என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே தங்களுக்கு எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தங்களது அணியே உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கிறது. அதோடு ஏக்நாத் ஷிண்டே அணியை சட்டமன்ற சபாநாயகர், மக்களவை சபாநாயகர் அங்கீகரித்திருக்கிறார்கள்.

ஏக்நாத் ஷிண்டே தங்களது அணிக்கு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் மனுவும் கொடுத்திருக்கிறார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியினர் தங்களுடைய ஆதரவாளர்கள் பட்டியலை ஆதாரத்துடன் வரும் 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இதனால் இரு தரப்பினரும் ஆதரவாளர்களைத் திரட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில் ``தேர்தல் கமிஷன் உண்மையான சிவசேனா எது என்பது குறித்து முடிவுசெய்யத் தடை விதிக்க வேண்டும். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த மனு மீது முடிவு செய்யப்படும் வரை தேர்தல் கமிஷன் எந்தவித நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அது நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக அமைந்துவிடுவதோடு, நீதிமன்ற அவமதிப்பாக மாறிவிடும்” என்று உத்தவ் தாக்கரே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேவுக்கு வரும் 27-ம் தேதி பிறந்தநாள். அன்று யாரும் தனக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஆதரவாளர்கள் பட்டியலைக் கொடுக்கும்படியும் கட்சி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். கட்சி நிர்வாகிகளிடம் 50 லட்சம் பேர்கொண்ட தொண்டர்கள் பட்டியலைத் தயாரித்துக் கொடுக்கும்படி உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!