Published:Updated:

பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொல்லை: நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ஆஜர்

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் 400 பக்கம்கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடந்த பிப்ரவரி மாதம், 21-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி நியமனம் செய்யப்பட்டிருந்தார். பாதுகாப்பு ஆலோசனைப் பணியின்போது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி-யின் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், அப்போதைய டி.ஜி.பி ஆகியோரிடம் புகார் அளிக்க காரில் சென்றபோது, அந்த வழியில் முக்கிய காவல் அதிகாரி ஒருவர் காரை வழிமறித்து சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அதற்கு அந்தப் பெண் அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, சென்னையில் உயரதிகாரிகளை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்

இந்தப் பாலியல் புகாரில் சிறப்பு டி.ஜி.பி மீது விசாரணை நடத்தும்படி ஆறு பேர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தப் புகார், பின்னாளில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்மீது சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி பகுதிக்கு அருகில் நடந்த சம்பவம் என்பதால், இது குறித்து விசாரணையைத் தொடங்கியது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீஸ். பின்னர், தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

சென்னை: பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகார் - சிறப்பு டி.ஜி.பி சஸ்பெண்ட்!

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார் அந்தப் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், கடந்த ஜூலை 29-ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி ஆகியோரை இன்று (09.08.2021) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம்.

பாதுகாப்புப் பணியில் காவல்துறை
பாதுகாப்புப் பணியில் காவல்துறை

அதைத் தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகையின் நகல்களைப் பெற்றுக்கொண்டதோடு, மனுத்தாக்கல் செய்து நேரடியாக ஜாமீன் பெற்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், அடுத்த வழக்கு விசாரணை வரும் 16-ம் தேதி நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு