Published:Updated:

8 பேர் மீது அபராதம்..! - அதிகாரிகளை கலங்கடித்த தகவல் ஆணையம்

14 ஆண்டுகளில் 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதுவும் கிராமப் பகுதிகளிலிருந்தே அதிக அளவு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தகவல் பெறும் உரிமை சிறப்பு முகாம்.
தகவல் பெறும் உரிமை சிறப்பு முகாம். ( Arun.K )

அரசு இயந்திரத்தின் பணிகள் மற்றும் வெளிப்படைத்தன்மையை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பொது அதிகாரம் பெற்ற அரசுத் துறைகளிடமிருந்து தகவல்களைப் பெறலாம். இந்தச் சட்டத்தில் மொத்தம் 29 பிரிவுகள் உள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு வழங்கிய 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்பது இந்தச் சட்டத்தின் சாரம்சமாகும். இதில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள், அமைச்சரவையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் போன்றவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமை சிறப்பு முகாம்.
தகவல் பெறும் உரிமை சிறப்பு முகாம்.

தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு மற்றும் மனுக்கள் மீதான விசாரணை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதாப் குமார் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் சிறப்பு முகாம் ஊட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார், "ஆணையம் தொடங்கி 14 ஆண்டுகளில் 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு வருகிறது. மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலிருந்து அதிக அளவு மனுக்கள் பெறப்படுகின்றன. நகரங்களை ஒப்பிடுகையில் கிராமப்புறங்களிலிருந்து அதிக அளவு மனுக்கள் பெறப்படுகின்றன.

மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார்.
மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார்.

மனுதாரர்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் உரிய பதிலை அளிக்க வேண்டும். தகவல் தர தவறும்பட்சத்தில் பொது தகவல் அலுவலர்கள் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். மாவட்டம்தோறும் தகவல் உரிமைச் சட்டத்தில் கோரப்படும் தகவல்கள் கிடைக்காதபட்சத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் முறையிடலாம். அங்கும் பதில் கிடைக்கவில்லை எனில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம். நீலகிரி மாவட்டத்தில் முறையாகப் பதிலளிக்காத 8 அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.