Published:Updated:

`ஆன்மிகப் பணியில் ஈடுபடுங்கள்!' - குஜராத் படுகொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன் அளித்தது உச்ச நீதிமன்றம்!

குஜராத் படுகொலை
குஜராத் படுகொலை

சர்தார்புரா கிராமத்தின் தலைவரும், முன்னாள் தலைவரும் தங்கள் அடியாள்களுடன் சிறுபான்மையினரைப் படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருமே பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள்.

கடந்த ஜனவரி 28-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு 2002-ம் ஆண்டு குஜராத்தில் சிறுபான்மையினரைப் படுகொலை செய்த குற்றவாளிகள் 31 பேருக்குப் பிணை அளித்து உத்தரவிட்டது. 2002-ம் ஆண்டு, குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு, சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், சர்தார்புரா பகுதியில் நடந்த படுகொலைகளுக்காக 17 குற்றவாளிகளும், ஓட் கிராமத்தில் நடந்த படுகொலைகளுக்காக 14 குற்றவாளிகளும் ஆயுள் தண்டனை பெற்றிருந்தனர். அவர்களுக்குத் தற்போது பிணை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பிணை அளிக்கப்பட்டுள்ள 31 பேரும் ஆன்மிக வழியில் சமூக சேவை செய்யுமாறும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மத்தியப் பிரதேச அரசு நிர்வாகம் உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளது நீதிபதி பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.
`அயனாவரம் சிறுமி வழக்கில் 15-வது நபர் விடுதலை! - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

2002-ம் ஆண்டு, பிப்ரவரி 28 அன்று, குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்தது. சர்தார்புரா என்ற ஊரில், சிறுபான்மையினர் நடத்தி வந்த சிறிய கடைகள் முதலில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஊரில் வன்முறை வெடித்ததையடுத்து, அந்த ஊர் மக்கள் காவல்துறையினரின் உதவியை நாடினர். அன்று இரவு 9 மணிக்கு, சிறுபான்மையினர் வாழும் பகுதிகள் வன்முறையாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு காரணங்களைக் கூறிவிட்டு, அந்த இடத்திலிருந்து கிளம்பியதாகக் கூறப்படுகிறது.

வன்முறையாளர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிறுபான்மையினரான 31 பேர் அங்கிருந்த வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்து மறைந்திருந்தனர். அவர்களுள் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர். எனினும், வன்முறை கும்பல் மறைந்திருந்தவர்களைக் கண்டுபிடித்தது. சுற்றியிருந்த கதவுகளை அடைத்து, மறைந்திருந்தவர்கள் மீது முதலில் ஆசிட் வீசியது. இரும்பு ராட் ஒன்றில், மின்சார வயர் கட்டப்பட்டு, அறைக்குள் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டது. இதில் மறைந்திருந்தவர்களுள் 29 பேர் பலியாகினர். நள்ளிரவில் காவல்துறையினர் வந்த பிறகு, எஞ்சியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். அன்று சர்தார்புராவில் கொல்லப்பட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை 33.

நீதிபதி பாப்டே
நீதிபதி பாப்டே

அதே நாளில், குஜராத்தின் மற்றொரு பகுதியில் இருந்த ஓட் என்ற கிராமத்தில், வன்முறைக் கும்பலுக்குப் பயந்து ஒரே வீட்டில் தஞ்சம் புகுந்த சிறுபான்மையினர் அனைவரையும் வீடோடு எதிர்த்துக் கொன்றது அந்தக் கும்பல். இதில் 27 பேர் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணையின் போது, 2 பேரின் உடல்களை மட்டுமே அடையாளம் காட்ட முடிந்தது; மற்ற அனைவரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைத்தது குஜராத் காவல்துறை.

அன்றைய நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசு சிறுபான்மையினர் அதிகமாக, கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட பகுதிகளை சரிவர விசாரிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், 2008-ம் ஆண்டு இந்த வழக்குகளைச் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி, மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது. கோத்ரா, குல்பார்க் சொசைட்டி, நரோடா பாட்டியா, சர்தார்புரா, ஓட் முதலான கிராமங்களில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டன.

சர்தார்புரா கிராமத்தின் தலைவரும், முன்னாள் தலைவரும் தங்கள் அடியாள்களுடன் சிறுபான்மையினரைப் படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருமே பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள். சர்தார்புரா வழக்கில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் இறுதியாக 17 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

ஓட் வழக்கில் 41 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு உடனே பிணை வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு, இவர்களுள் 23 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 23 பேரில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு, இந்தக் குற்றவாளிகளுள் 19 பேரின் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் பிணை தந்த நீதிமன்ற அமர்வு, வழக்கு முடியும் வரை குற்றவாளிகளுள் யாரும் குஜராத் மாநிலத்திற்குள் நுழையக் கூடாது எனவும், மத்தியப் பிரதேசத்தில் தங்கிக் கொள்ளலாம் எனவும் கூறியது. மேலும், குற்றவாளிகள் ஆன்மிகப் பணியிலோ, சமூகப் பணியிலோ ஈடுபட வேண்டும் எனவும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மத்தியப் பிரதேச மாநில அரசு உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தீஸ்தா செடல்வாட்
தீஸ்தா செடல்வாட்
அன்று ஜெயலலிதா... இன்று ராமதாஸ்... தொடரும் முரசொலி நில விவகாரம்!

குஜராத் படுகொலைகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் குற்றவாளிகளுக்குப் பிணையளித்திருப்பது துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் ``பாதிக்கப்பட்ட மக்களிடமோ, வழக்கு தொடுத்த எங்களிடமோ ஆலோசிக்காமல், குற்றவாளிகளுக்குப் பிணை அளிக்கப்பட்டிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

பின் செல்ல